கடலூரில் ஒன்றாக இணைந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்
’’மழை வெள்ள பாதிப்புகளை தனித்தனியாக பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வந்த நிலையில் கடலூரில் ஒன்றாக ஆய்வு’’
கடலூரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முன்னாள் முதல்வர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம்*
தென்மேற்கு பருவமழை காலத்தில் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பாவிட்டாலும், நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்தது. மேலும் தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாக மழை இன்றி காணப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழையால் பெரும்பாலன ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பல இடங்களில் விளை நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த மழைநீர் இன்னும் வடியாததால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
புவனகிரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள். முன்னாள் முதல்வர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வழங்கினர். டெல்டா மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். முதல் கட்டமாக புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புவனகிரி நகரில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரிசி, பாய், போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். அதிமுக எம்எல்ஏக்கள் புவனகிரி அருண்மொழித்தேவன், சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பூவாலை கிராமத்திற்குச் சென்ற முன்னாள் முதல்வர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூவாலை கிராமத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மழை பாதித்த பார்வையிட்டனர்.பரவனாற்றின் கரையில் சுமார் 2,000 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கிய பகுதியை பார்வையிட்டனர். பின்னர் சிறிய சாலையில் இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் ஜீப்பில் சென்று பயிர் பாதிப்புகளை பார்வையிட்டனர்.அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எம்.சி.சம்பத், எம்எல்ஏக்கள் புவனகிரி அருண்மொழித்தேவன், சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.