ஒரு சமூகத்தினரை மட்டும் நீதிபதியாக நியமிக்க கூடாது - வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன்
நீதிபதிகள் நியமனத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டும் நியமிக்க கூடாது. அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

விழுப்புரம்: நீதிபதிகள் நியமனத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டும் நியமிக்க கூடாது. அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் தேசிய அளவில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் என தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் மாரப்பன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொருளாளர் வழக்கறிஞர் காளிதாஸ் தலைமை நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் மாரப்பன்.,
ராஜஸ்தான் மாநிலத்தை போல தமிழகத்திலும் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழ்நாட்டில் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் அல்லது அகில இந்திய அளவில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அந்த கோரிக்கை வெற்றிபெறும் என நம்புகிறோம்.
சட்டம் கொண்டு வரவில்லை என்றால் இரண்டு மாதங்களுக்கு பிறகு சென்னையில் பல ஆயிரம் வழக்கறிஞர்களை ஒன்று திரட்டி வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்திற்காக மிகப்பெரிய பேரணியை கோட்டையை நோக்கி நடத்துவோம். எங்களுடைய சேம நல நிதியை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி அரசை போல மாதம் ஐந்தாயிரம் வழக்கறிகளுக்கு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினர் சிவில் நீதிமன்றத்திற்கு வர வேண்டிய வழக்குகளை கட்டப்பஞ்சாயத்து பேசி வருகின்றனர் இது தவிர்க்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக காவல் நிலையம் சென்ற வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குறிப்பாக தாம்பரம் காவல் ஆணையர் 18 வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் வழக்கறிஞர்கள் வீடுகளுக்கு சென்று குடும்பங்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
தாம்பரம் காவல் ஆணையரை தமிழக அரசு பணிநீக்கம் செய்ய வேண்டும். டிஜிபி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் மறியல் நடைபெறும். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்ததை கண்டித்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர் திரண்டு டெல்லியில் போராட்டம் நடத்தினோம். உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்று மூத்த வழக்கறிஞர்களுக்கும் வழங்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டும் நியமிக்க கூடாது அனைத்து சமூகத்தினருக்கும் கொடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு மனு அளித்துள்ளோம் என்றார்.





















