New Year Celebration 2023: இது புதுச்சேரியின் புத்தாண்டு கொண்டாட்ட விழா..!
புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி சிறப்புமிக்க மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு ஆபிஷேகம், ஆராதனை
புதுச்சேரி ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகளால் திக்குமுக்காடியது. ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக புதுச்சேரிக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாதாரண ஓட்டல்கள் வரை நிரம்பின. ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையால் முக்கிய சாலைகளில் நேற்று வாகன நெரிசல் காணப்பட்டது.
நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் கடற்கரை பகுதியில் திரண்டு இருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்த இடங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தலைமை செயலகம் எதிரேயும், பாண்டி மெரீனாவிலும், ஓட்டல்களிலும் ஆண்கள், பெண்கள் நடனமாடி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர். இளைஞர்கள் முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தபடி சென்றனர். ஏராளமானோர் குவிந்ததால் கடற்கரை திக்குமுக்காடியது. புதுவை கடற்கரைக்கு நேற்று நள்ளிரவில் இளைஞர்கள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள் அங்கே ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு ஆபிஷேகம், ஆராதனை நடக்கிறது. மூலவர், உற்சவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. புத்தாண்டையொட்டி தனிநபர் அர்ச்சனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது 30 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டத்தை வரிசைப்படுத்த கம்புகள் கட்டப்பட்டு உள்ளன.
இதேபோல் காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், மிஷன் வீதியில் உள்ள செட்டிக்கோவில், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாசப்பெருமாள், ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஹயக்ரீவர், எம்.எஸ்.அக்ரகாரம் கோதண்டராமர் வீரஆஞ்சநேயர், கற்பக விநாயகர். ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர், பாகூர் மூலநாதர், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர், பெத்துசெட்டிபட்டி சுப்பிரமணியசாமி, லாஸ்பேட்டை முருகன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிசேகமும் ஆராதனையும் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம், தூயயோவான் தேவாலயம், புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், புனித பாத்திமா அன்னை தேவாலயம், வில்லியனூர் தூய லூர்து அன்னை தேவாலயம், அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலயம், முத்தியால்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம் உள்பட புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.