பக்கிங்காம் கால்வாயில் முடியும் நிலையில் ரூ 161 கோடியில் புதிய தடுப்பணை - விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம் : மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் ரூ. 161 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளதால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் ரூ 161 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளதால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் அருகில் கந்தாடு, வட அகரம், வண்டிப்பாளையம், தேவிகுளம், ஆத்திக்குப்பம், கூனிமேடு, செய்யாங்குப்பம், கோட்டிக்குப்பம், உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இங்கு சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், மணிலா, தர்பூசணி, தென்னை, கேழ்வரகு, கரும்பு போன்ற பயிர்கள் நடவு செய்யப்படுகிறது. இப்பகுதியில் சிறப்பாக நடைபெற்றுவந்த விவசாயம் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், விளை நிலம் உவர் நிலமாக மாறுதல் போன்ற காரணங்களால் விவசாய தொழில் நலிவடைந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட முதலியார்பேட்டைக்கும், மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட காக்காப்பள்ளம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கால்வாயின் குறுக்கே சுமார் 100 ஆண்டுக்குமுன் ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை மற்றும் பவுர்ணமி நேரங்களில் கடல் நீரானது முகத்துவாரம் வழியாக பக்கிங்காம் கால்வாக்கு செல்கிறது. இந்த உப்பு நீரானது விளை நிலங்களில் கலக்காமல் இங்குள்ள தடுப்பணையிலேயே தடுத்து நிறுத்தப்படும். பருவ மழைக்காலத்தில் பெய்யும் மழை நீரானது வீணாக கடலில் சென்று கலக்காமல் தடுப்பணையின் தெற்கு பகுதியில் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்படுவது வழக்கம். இது போல் தடுத்து நிறுத்தப்படும் மழை நீரால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து விடும். மேலும் இந்த நீரையே பல கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் தொட்டி ஏற்றம் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இது போல் பல மாதங்கள் வரையில் ஏரி போல் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேங்கி நிற்கும் நீரில் மீன்கள், நண்டுக்கள், இறால்கள் அதிகளவில் வளர்ந்து இருக்கும்.. இதை பொது மக்கள் பிடித்து வாழ்க்கை நடத்தி உள்ளனர்.
இதனால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயமும் பண்டைக் காலம் முதல் சிறப்பாக நடந்து விவசாயிகளின் வாழ்கையும் உயர்ந்துள்ளது. ஆனால் இவ்வளவு சிறப்புமிக்க தடுப்பணையை கடந்த 35 ஆண்டுக்கும் மேலாக அரசு சரியான முறையில் பராமரிக்கவில்லை. இதனால் தடுப்பணை முற்றிலும் சிதலம் அடைந்துவிட்டது. இதன் காரணமாக கடல் நீர் விவசாய நிலப்பகுதிக்கு சென்று விட்டது. இது போல் பருவ மழைக்காலத்தில் பெய்யும் மழை நீரானது தேக்கிவைக்க இடம் இல்லாமல் மழை பெய்யும் மறு நிமிடமே கடலில் சென்று கலந்துவிடுகிறது. இது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விளை நிலங்களூம் உவர் நிலங்களாக மாறி விவசாயத்தொழில் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் இந்த தடுப்பணை பொது மக்களின் போக்குவரத்திற்கும் பயன்பட்டுள்ளது. இங்குள்ள முதலியார்பேட்டை, வட அகரம், கந்தாடு, புதுப்பாக்கம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த வழியை பயன் படுத்தி சுமார் 100 மீட்டர் தூரத்திற்குள் மரக்காணம் வந்துள்ளனர். ஆனால் தடுப்பணை உடைந்து விட்டதால் இவர்கள் தற்போது சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது.
இந்த தடுப்பணையை புதுப்பித்து புதிய தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்தொழிலும் செழிக்கும். இது போல் இங்குள்ள பக்கிங்காம்கால்வாய் உள்ள பகுதியில் சுமார் 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலங்கள் அமைந்துள்ளது. இந்த சதுப்பு நிலப்பகுதி தென் இந்தியாவிலேயே இரண்டாவது இடமாகும். இதனால் இப்பகுதியில் அதிகளவில் தண்ணீரைதேக்கினால் கோடைக்காலத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஏற்படும் குடி நீர் தட்ப்பாட்டிற்கு கூட இங்குரிந்து தண்ணீர் எடுத்துச்செல்லமுடியும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இங்குள்ள பக்கிங்காம் கால் வாயில் புதிய தடுப்பணை கட்டி அதில் மழை நீரை தேக்கி சென்னைக்கு குடி நீர் எடுத்துச்செல்லும் நோக்கோடு கடந்த ஆண்டு ரூ 161 கோடியை ஒதுக்கி அதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து புதிய தடுப்ணை கட்டும் பணியும் துவங்கியது. இந்த புதிய தடுப்பணை கட்டும்பணி நிறைவடைந்து தற்போது இறுதிகட்டப்பணிகள் மட்டும் நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று பொப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். இதன்காரணமாக வரும் பருவ மழைக்காலத்திற்குள் புதிய தடுப்பணை கட்டும் பணி முழுமையடைந்து விடும். இதன்காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.