அரசு அலுவலகத்தில் நள்ளிரவில் பறந்த தேசியக்கொடி; அதிருப்தி அடைந்த பொதுமக்கள்
காலையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி மாலை 6 மணிக்கு இறக்கப்பட வேண்டும். ஆனால் இரவு 9 மணியை தாண்டியும் தேசியக் கொடி கம்பத்தில் பறந்தது

விழுப்புரம்: மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் இரவில் பறந்த தேசியக்கொடி
நாட்டின் 76-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சி பெருக்குடனும் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தாசில்தார் பழனி தலைமைதாங்கி, தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் வருவாய் துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். காலையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி மாலை 6 மணிக்கு இறக்கப்பட வேண்டும். ஆனால் இரவு 9 மணியை தாண்டியும் தேசியக் கொடி கம்பத்தில் பறந்தது. இதை பார்த்த பொதுமக்கள், தேசிய கொடிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று அதிருப்தி அடைந்தனர்.
விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வளாக திடலில் குடியரசு நாள் விழா
விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வளாக திடலில் குடியரசு நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சி.பழனி தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்களையும் ஆட்சியர் பறக்கவிட்டார்.
இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட எஸ்.பி ப. சரவணனுடன் சென்று அணிவகுப்பை ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊர்க்காவல்படை, தீயணைப்புத் துறை, தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் சி. பழனி ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களின் வாரிசுகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியர், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 73 போலீஸாருக்கு முதல்வரின் பதக்கம் வழங்கிய ஆட்சியர், 29 பயனாளிகளுக்கு ரூ. 8.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், பல்துறைகளைச் சேர்ந்த 309 அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் வனத்துறை அமைச்சர் க. பொன்முடி, எம்எல்ஏக்கள், விழுப்புரம் இரா. லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூர் அ.சிவா, மயிலம் ச.சிவக்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் எஸ்.பி. ப . சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. அறிவழகன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.





















