சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு ; நீதிமன்றத்தில் காலை தொடங்கி இரவு வரை நடந்த விசாரணை
பெண் எஸ்பிக்கு பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபியிடம் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி 297 கேள்விகளை எழுப்பி அவரின் பதிலை பதிவு செய்து கொண்டார்.
விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபியிடம் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி 297 கேள்விகளை எழுப்பி அவரின் பதிலை பதிவு செய்து கொண்டார்.
பெண் எஸ்பி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த 13-ந் தேதியன்று நிறைவடைந்தது.
இதையடுத்து விசாரணை முடிவடைந்த அவர்கள் 68 பேரும் அளித்துள்ள சாட்சியங்களில் இருந்து, குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களான முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகினர்.அப்போது அரசு தரப்பு அளித்த சாட்சியங்கள் அடிப்படையிலான கேள்விகள் அனைத்திற்கும், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் இன்றைய தினமே பதிலளிக்க வேண்டுமென நீதிபதி புஷ்பராணி தெரிவித்தார்.
அப்போது, நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க தங்களுக்கு கூடுதல் நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டுமென இருவரும் வலியுறுத்தினர். இதையடுத்து கேள்விகளுக்கு பதிலளிக்க கூடுதல் நாட்கள் அவகாசம் அளிக்க முடியாது என்றும், இரவே ஆனாலும் பரவாயில்லை, கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் முழுமையாக பதில் அளித்தே ஆக வேண்டுமென, நீதிபதி புஷ்பராணி திட்டவட்டமாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி ஆகிய இருவரும் பதிலளித்தனர்.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை இரவு 10 மணிக்கு முடிவடைந்தது. இதில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யிடம் 297 கேள்விகளும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பியிடம் 125 கேள்விகளும் முன்வைக்கப்பட்டு அவர்களிடம் நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு அவர்கள் இருவரும் அளித்த பதில்களை நீதிபதி பதிவு செய்துகொண்டார். தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணை 21-ந் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் சாட்சிகள் யாரேனும் இருந்தால் விசாரிக்க அனுமதிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்