இரு மொழி கொள்கைதான் இருக்கும், மூன்றாவது மொழி தேவையில்லை - கடுப்பான அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் தமிழ், உலக மொழியான ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கைதான் இருக்கும். மூன்றாவது மொழி தேவையில்லை - அமைச்சர் பொன்முடி

விழுப்புரத்தில் உள்ள எம்ஜிஆர் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் பொன்முடி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி பாராட்டினார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்காதவர்களுக்கு நிதி வழங்க மாட்டோம் என ஒன்றிய அமைச்சர் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இதற்கு தமிழக முதல்வர் பதிலளித்துள்ளார். 1967 அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் இருமொழிக் கொள்கை உள்ளது. தமிழும் உலகம் மொழியான ஆங்கிலமும் இருக்கும்பொழுது வேறு மொழி தேவையில்லை. இரு மொழி கொள்கைதான் தமிழகத்தில் இருக்கும் இதனை தமிழக முதல்வர் தெளிவாக பதில் சொல்லியுள்ளார்.
படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்று பயனடைந்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தனியார் துறை நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட ஒப்பந்தம் மேற்கொண்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டு வருகிறது.பெருகி வரும் தொழில் வளர்ச்சியின் காரணமாக, தற்போது தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. படித்த இளைஞர்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெறும்பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், ஒவ்வொரு மூன்றாம் வெள்ளிக்கிழமையும், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாலும் இதுநாள் வரை 100 கலைஞர் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் உட்பட 1960 சிறிய மற்றும் பெரிய வேலைவாய்ப்பு முகாம்களில் 54,857 வேலையளிக்கும் நிறுவனங்களில் 3815 மாற்றுத்திறனாளிகள் உட்பட 2,33,758 வேலைநாடுநர்கள் பணிவாய்ப்பினை பெற்றுள்ளனர். இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 173 தனியார் துறை நிறுவனங்களும், 2271 வேலைநாடுநர்கள் கலந்துகொண்டனர். இதில், 7 மாற்றுத்திறனாளிகள் உட்பட 416 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 12 நபர்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ளனர். 182 நபர்கள் வேலைவாய்ப்பிற்கான இரண்டாம் கட்ட தேர்விற்கு தகுதிபெற்றுள்ளனர்.
எனவே, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தேர்வானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, சிறப்பான முறையில் பணிபுரிந்து தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாதவர்கள் மனம் தளராமல் தங்களுடைய திறமைகளை நன்கு வளர்த்துக்கொண்டு அடுத்து நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைந்திட வேண்டும் என வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

