அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழுப்புரத்தில் 1,254 நியாய விலைக்கடைகள் மூலமாக, 6,15,287 குடும்ப அட்டைதாரர்களுக்கு 01 கிலோ பச்சரிசி, 01 கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கப்பணத்துடன் வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பூண்டி ஊராட்சி, செஞ்சி பேரூராட்சி, வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வல்லம் ஊராட்சி, மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கந்தூர் ஊராட்சி, திண்டிவனம் நகராட்சி மற்றும் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாரம் ஊராட்சி ஆகிய இடங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வேட்டி, சேலையினை வழங்கினார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவிக்கையில்,
முதல்வர் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.238.00 கோடி மதிப்பீட்டில் தலா 01 கிலோ பச்சரிசி, 01 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கப்பணத்துடன் வேட்டி, சேலை வழங்கப்படும் என உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை ஆழ்வார்பேட்டையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கி, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாய விலை கடைகளிலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பூண்டி ஊராட்சி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி வட்டத்தில், 207 நியாய விலைக்கடைகள் மூலமாக, 89,110 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கண்டாச்சிபுரம் வட்டத்தில், 78 நியாய விலைக்கடைகள் மூலமாக, 44,381 குடும்ப அட்டைதாரர்களுக்கும், மரக்காணம் வட்டத்தில், 73 நியாய விலைக்கடைகள் மூலமாக, 35,361 குடும்ப அட்டைதாரர்களுக்கும், மேல்மலையனூர் வட்டத்தில், 106 நியாய விலைக்கடைகள் மூலமாக, 41,700 குடும்ப அட்டைதாரர்களுக்கும், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில், 84 நியாய விலைக்கடைகள் மூலமாக, 44,092 குடும்ப அட்டைதாரர்களுக்கும், திண்டிவனம் வட்டத்தில், 216 நியாய விலைக்கடைகள் மூலமாக, 99,688 குடும்ப அட்டைதாரர்களுக்கும், வானூர் வட்டத்தில், 110 நியாய விலைக்கடைகள் மூலமாக, 52,730 குடும்ப அட்டைதாரர்களுக்கும், விக்கிரவாண்டி வட்டத்தில், 159 நியாய விலைக்கடைகள் மூலமாக, 82,571 குடும்ப அட்டைதாரர்களுக்கும், விழுப்புரம் வட்டத்தில், 221 நியாய விலைக்கடைகள் மூலமாக, 1,25,220 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 434 இலங்கை முகாம்வாழ் தமிழர் குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 1,254 நியாய விலைக்கடைகள் மூலமாக, 6,15,287 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 01 கிலோ பச்சரிசி, 01 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கப்பணத்துடன் வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதால், அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலனை காத்திடும் வகையில் நிதியுதவி, விவசாய பயிர்களுக்கு நிதியுதவி, கால்நடை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி என பல்வேறு நிதியுதவிகளை வழங்கி உள்ளார்கள். இப்படியொரு நிதிநெருக்கடி உள்ள நிலையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள், விவசாய பெருமக்கள் மற்றும் உழைக்கும் வர்கத்தினர் அனைவரும் மனமகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். இதன் மூலம், அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பிலிருந்தபொழுது, அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் அனைவரும் சமம் என்ற மனப்பான்மையுடன் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை சிறப்புடனும், மனமகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், பொங்கல் திருநாளை முன்னிட்டு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகையும் பொங்கல் தினத்திற்கு முன்பாகவே வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முக்கிய நோக்கம் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடிட வேண்டும். எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்பு, வேட்டி, சேலை மற்றும் ரூ.1,000/- ரொக்கப்பணம் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மனமகிழ்வுடன் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என அமைச்சர் செஞ்சி.மஸ்தான் தெரிவித்தார்.