கூவாகம் திருவிழா; தங்கத்தில் முறைகேடு செய்யும் இந்து சமய அறநிலையத்துறை - திருநங்கைகள் பரபரப்பு புகார்
தாங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிக்கயிறை அறுத்தெறிந்து அதிலிருக்கும் தங்கத்தை தானமாக இந்து சமய அறநிலையத்துறையிடம் கொடுக்கிறோம் அது பாதுகாப்பாக இருக்கிறதா என்று தெரியவில்லை.

விழுப்புரம்: 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்று தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டினர்.
திருநங்கைக்கான அழகிப்போட்டி, கலை நிகழ்ச்சிகள்
விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணா, ஆல்கா உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்.,
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் வருகை தர உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் வருகிற 12-ந் தேதி 25-ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் கூவாகம் அழகிப்போட்டிக்கான முதல் சுற்று காலை 10 மணிக்கு விழுப்புரம் ஆஞ்சநேயா திருமண மண்டபத்திலும், மாலை 7 மணிக்கு இறுதிச்சுற்று போட்டி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலிலும் நடக்கிறது. இதில் சின்னத்திரை நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்கிறார்கள். முன்னதாக 11-ந் தேதி சென்னை திருநங்கைகள் சார்பில் மிஸ் திருநங்கைக்கான அழகிப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திருநங்கைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களிலும் மற்றும் கூவாகம் கிராமத்தில் தேரோடும் 4 வீதிகளிலும் எங்கள் அமைப்பின் சார்பில் நீர்,மோர் பந்தல், உணவு பந்தல் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க நிழற்பந்தலையும் 84 மாவட்ட திருநங்கைகளின் தலைவர்கள் ஏற்பாடு செய்ய உள்ளனர்.
கூவாகம் கிராமத்தில் கூடுதல் நிழற்பந்தல் அமைப்பது, கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குவது, கழிவறைகள் அமைப்பது, போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துவது என விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அவர்களும் செய்து தருவதாக கூறியுள்ளனர்.
அடிப்படை வசதிகளே இல்லை
மேலும் கூவாகம் திருவிழா சமயங்களில் தங்கும் விடுதிகளின் கட்டணத்தை 3, 4 மடங்காக உயர்த்தி விடுகின்றனர். அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூவாகம் கோவிலில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. அங்கு ஒரு கலையரங்கம், அன்னதானக்கூடம், தங்கும் அறைகள், போதுமான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவற்றை 20 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். ஆனால் திருவிழா சமயங்களில் மட்டும் தற்காலிக குடிநீர் வசதி, கழிவறை, குளிக்கும் அறை வசதி செய்து தருகின்றனரே தவிர நிரந்தரமாக செய்து தருவதில்லை. கோவிலுக்கு வர்ணம் பூசியே பல ஆண்டுகள் ஆகிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கென்று இருக்கிற ஒரே கோவில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்தான். அப்படிப்பட்ட இந்த கோவிலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும். கூவாகம் கிராமம் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால் கூத்தாண்டவர் கோவிலில் எந்த வளர்ச்சியும் இல்லை. ஏன் நிராகரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனவே இந்த கோவிலில் அடிப்படை வசதிகளை செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற ஆண்டிலாவது தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தானமாக கொடுக்கும் தங்கத்தில் முறைகேடு - திருநங்கைகள் புகார்
தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பினர் கூறுகையில், கூவாகம் திருவிழாவின்போது தேர் அழிகளம் புறப்பட்டதும் திருநங்கைகள், தாங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிக்கயிறை அறுத்தெறிந்து அதிலிருக்கும் தங்கத்தை தானமாக இந்து சமய அறநிலையத்துறையிடம் கொடுக்கிறோம். இதுவரை நாங்கள் கொடுத்துள்ள தங்கம் எவ்வளவு இருக்கிறது, அது பாதுகாப்பாக இருக்கிறதா என்று தெரியவில்லை. அதை முறையாக அறநிலையத்துறையினர் தெரிவிப்பதில்லை. இதனால் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் அந்த தகவலை கேட்டுப்பெற முடிவு செய்துள்ளோம்.
கடந்த ஆண்டு ஒரு முறைகேடு நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 11.30 மணி வரை திருநங்கைகள் தானமாக கொடுத்த தங்கத்திற்கு ரசீது கொடுக்கவில்லை. பின்னர் எங்களில் படித்த திருநங்கைகள் சிலர் ரசீது கேட்டு பிரச்சினை செய்ததும் 11.30 மணிக்கு பிறகு கொடுக்கப்பட்ட தங்கத்தாலி தான் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அப்படியானால் அதற்கு முன்பு கொடுக்கப்பட்ட தங்கத்தாலி என்னவாயிற்று? இந்த முறை அதுபோன்ற முறைகேடுகள் நடக்காதவாறு புள்ளி விவரமாக பதிவு செய்ய வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.
திருநங்கைகளுக்கு தனி கொள்கைகளை அமல்படுத்த வேண்டும்- அரசுக்கு வலியுறுத்தல்
கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களைப்போல் தமிழக அரசும், திருநங்கைகளுக்கு தனி கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை, குடும்ப உரிமை, தனி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுடன் கூடிய தனி கொள்கைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு கூடிய விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என திருநங்கைகள் தெரிவித்தனர்.





















