கள்ளக்குறிச்சி : உயிரிழந்த தந்தையின் உடல் முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகன்
கள்ளக்குறிச்சி அருகே நெஞ்சுவலியால் உயிரிழந்த தந்தையின் உடல் முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே நெஞ்சுவலியால் உயிரிழந்த தந்தையின் உடல் முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 70). திமுக பிரமுகரான இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி அய்யம்மாள் பெருவங்கூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவருடைய மகனும், பி.காம். பட்டதாரியுமான பிரவீன் என்பவருக்கும், உறவினரான சென்னை மேடவாக்கத்தில் வசிக்கும் சண்முகநாதன்- சுபாஷினி தம்பதியரின் மகள் சொர்ணமால்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும், உறவினர்களும் முடிவு செய்தனர். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் முடிந்தது.
வருகிற 27-ந் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக இருவீட்டாரும் திருமண பத்திரிகைகள் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராஜேந்திரன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். மகனுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் ராஜேந்திரன் இறந்தது குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் செய்வதறியாமல் தவித்த பிரவீன் தந்தையின் ஆசீர்வாதம் பெறவேண்டும் என்பதற்காக அவருடைய உடல் முன்பு, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதனை இருவீட்டாரும், உறவினர்களும் ஏற்றுக் கொண்டதுடன், திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மதியம் 1 மணியளவில் கொட்டும் மழையில் ராஜேந்திரன் உடல் முன்பு பிரவீன்-சொர்ணமால்யா திருமணம் நடந்தது. முன்னதாக பிரவீன் தனது தந்தை, தாய்க்கு பாதபூஜை செய்து, நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தாலி கட்டினார். அப்போது மணமகனின் தாய், பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள். இதையடுத்து ராஜேந்திரன் உடல் அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இறந்த தந்தையின் உடல் முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்