விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போட்டியிட்ட 3 மாற்றுத்திறனாளிகள் வெற்றி
விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டி
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட கவுன்சிலர், 293 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 6,097 பதவியிடங்கள் உள்ளன. இவற்றில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது 688 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு போட்டியிட்டவர்களில் 22 வேட்பாளர்களும், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டவர்களில் 369 பேரும் ஆக மொத்தம் 391 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 5,706 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் முதல்கட்டமாக கடந்த 6 ஆம் தேதியன்று செஞ்சி, முகையூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர் ஆகிய 7 ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட கவுன்சிலர், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 360 கிராம ஊராட்சி தலைவர், 2,558 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 3,092 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் 10,873 பேர் போட்டியிட்டனர். இந்த ஒன்றியங்களில் மொத்தமுள்ள 7,55,224 வாக்காளர்களில் 6,31,785 பேர் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 83.66 ஆகும்.
இதேபோல் 2ஆம் கட்டமாக கடந்த 9ஆம் தேதி காணை, கோலியனூர், மயிலம், மேல்மலையனூர், மரக்காணம், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 12 மாவட்ட கவுன்சிலர், 135 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 306 கிராம ஊராட்சி தலைவர், 2,161 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 2,614 பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 8,955 பேர் போட்டியிட்டனர். இந்த ஒன்றியங்களில் மொத்தமுள்ள 6,30,783 வாக்காளர்களில் 5,38,144 பேர் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 85.31 ஆகும். மொத்தத்தில் 2 கட்ட தேர்தலிலும் விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 84.41 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தல் முடிந்ததும் அதில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில் 2 கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 13 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்குப்பெட்டிகளில் பதிவான வாக்குச்சீட்டுகள் அந்தந்த வாக்கு எண்ணும் அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கும் தனித்தனியாக உருவாக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் அறைகளுக்கு கொண்டு வரப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இப்பணிகள் ஆரம்பிக்க ஒவ்வொரு ஒன்றியத்திலும் 9 மணி முதல் 9.30 மணி வரை ஆனது.
இதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு வாக்கு எண்ணும் அறைகளில் 12 மேஜைகளும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 30 மேஜைகளும் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 7 முதல் 10 சுற்றுகளாக வாக்குகள் எண்ண முடிவு செய்யப்பட்டு அப்பணிகள் நடந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டனர். இதில் கோலியனூர் ஒன்றியம் நொடர்ந்தனூர் கிராம பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினராக பாலமுருகன் என்பவர் தேர்வாகியுள்ளார், மேலும் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கீழ்புத்துப்பட்டு பஞ்சாயத்து மொண்டையன் பேட்டை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் 6ஆவது வார்டு உறுப்பினராக 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் பரிகம் ஊராட்சியில் அண்ணாமலை என்பவர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 250 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பொது மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது .
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வண்டலூர் ஊராட்சி 12 வது வார்டில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்ட டேனியல் மற்றும் 13வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்ட அவரது மனைவி எபினேசர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.