கடலூரில் வெள்ள அபாய எச்சரிக்கை எதிரொலி - ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
''ஒரு ஆய்வாளர் தலைமையில் 2 உதவி ஆய்வாளர்கள் என 70 பேர் கொண்ட குழு கடலூர் மாவட்டதிற்கு வருகை''
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் நேற்று முதல் சென்னையில் பெய்த மழையால் சென்னையின் பெரும்பாலன முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. மழை காரணமாக கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு பிறகு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதனால் மாவட்டத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பிவிட்டன மீதம் உள்ள ஏரிகளும் தொடர்ந்து நிரம்பி வருகின்றது, மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்பொழுது வரை பெய்து வரும் தொடர் மழையால் கடலூரில் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், மேலும் கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழு இன்று கடலூர் வருகை தந்துள்ளனர். ஒரு ஆய்வாளர் தலைமையில் 2 உதவி ஆய்வாளர்கள் என 70 பேர் கொண்ட குழு கடலூர் மாவட்டதிற்கு வருகை தந்தைள்ளனர்.
வருகை தந்த தமிழ்நாடு மீட்பு படை வீரர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அவர்களை சந்தித்து மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர், பிறகு காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அறிவுறுத்தலின்படி சிதம்பரம் பகுதியில் அதிகமான பாதிப்புகள் வரலாம் என கணிக்கப்பட்ட நிலையில் மீட்பு படை வீரர்களை சிதம்பரத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனுப்பி வைத்தார் மீட்பு படையினர் எந்தவித சூழலையும் சமாளிக்கும் வகையில் நாங்கள் தயாரான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து முன் எடுக்கப்பட்டு வருவதால் மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.