நெடுஞ்சாலை பணிகளில் சுணக்கம்.. பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்..
விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரி நெய்வேலி மற்றும் பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையே 165 கி.மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் சாலை பணிகள் இதுவரை முடிக்கப்படவில்லை. இதன் காரணமாக சாலை பலத்த சேதம் அடைந்து ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதனால் விபத்துகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசியநெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெய்வேலி என்.எல்.சி.ஆர்.ச்.கேட் அருகே நடந்தது.
இதற்கு நகர செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், வேல்முருகன், மேரி, என்.எல்.சி. சி.ஐ.டி.யு.தொழிற்சங்க தலைவர் ஜெயராமன், பொதுச்செயலாளர் திருஅரசு, பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் குப்புசாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் மாதவி, ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை சாலையை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களை காவல் துறையினர் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். நகர செயலாளர் உத்தராபதி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில், நகர குழு உறுப்பினர்கள் தினேஷ், .சங்கர் ராஜேந்திரன், முகமது நிசார் அகமது, பாண்டுரங்கன், ஜெயராம், நடராஜன், வசந்தா, வட்ட குழு உறுப்பினர்கள் பன்னீர், குமரகுருபரன், பூர்வ சந்திரன், மஞ்சுளா, கணேசன், சரவணன் உள்பட பலர் கலந்து கெண்டனர். அவர்களை காவல் துறையினர் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதற்கு முன்னதாகவே பல வருடங்களாக மக்களால் அந்த சாலையில் பயணிக்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர், அது மட்டும் இன்றி அங்கு இரவு நேரங்களில் சாலை சரியில்லாத காரணத்தினால் அதிக அளவிலான விபத்துகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் சாலை பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் சாபிலும் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.