நேர்மையாக தேர்தலை நடத்தாவிட்டால், தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சி.வி சண்முகம்
உள்ளாட்சி தேர்தலை நியாயமாக,நேர்மையாக நடத்தாவிட்டால் மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 6ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அத்துடன், இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் 9-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 24416 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடக்கும் பகுதிகளில் கடந்த 26ம் தேதி முதல் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அரசு செய்யும் தவறுகளை பொதுமக்களுக்கு சுட்டிக்காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்தாவிட்டால், மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மரக்காணம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமந்தை கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் சில கோரிக்கைகளை மனுவாக அளித்தார். இக்கோரிக்கைகளைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்காததால், அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் கடந்த 30-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, 'தமிழகம் முன்னணி மாநிலம். இங்கு ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் எந்தக் குறைபாடும் ஏற்படக் கூடாது. ஆகவே, மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அளித்த மனுவைப் பரிசீலனை செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அம்மனு மீது உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்துவதற்கு அனைத்துப் பகுதிகளிலும் ஆரம்பம் முதல் இறுதிவரை வாக்கு எண்ணி முடிக்கின்ற வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
அந்த வாக்குப் பதிவு முடிந்தபிறகு பதிவான வாக்குப் பெட்டிகளை வைக்க ஸ்ட்ராங் அறையை அனைத்துக் கட்சி பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஆலோசனையின்படி அந்த அறைகளை எங்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அறிவித்தது. மாநிலத் தேர்தல் ஆணையம் இவை அனைத்தையும் செய்வோம் என்று நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொண்டது.
ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள் போலச் செயல்படுகிறார்கள். எனவே, இத்தேர்தலை நியாயமான, நேர்மையான முறையில் நடத்தவில்லை என்றால், அதிமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும். இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்தார்.