மதுரை ஆதீனத்தை கொல்ல முயற்சி ? - போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்
மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது திட்டமிட்ட சதி, கார் சேதமடைந்தபோதும் இறை அருளால் மதுரை ஆதினம் உயிர் தப்பினார் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி: விபத்து மூலம் தன்னைக் கொல்ல முயன்றதாக மதுரை ஆதினம் புகார் அளித்திருந்த நிலையில், அது சாதாரண விபத்து என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
விபத்து மூலம் தன்னைக் கொல்ல முயன்றதாக மதுரை ஆதினம் புகார்
அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, பல்வேறு மாநில கவர்னர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், சிவாச்சாரியர்கள், சைவசமய அறிஞர்கள், அசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சைவ மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து மதுரை ஆதீனம் நேற்று முன்தினம் காரில் சென்னை புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதினம் சென்னை புறப்பட்டார்.
மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது திட்டமிட்ட சதி, கார் சேதமடைந்தபோதும் இறை அருளால் மதுரை ஆதினம் உயிர் தப்பினார் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் வலியுறுத்தியுள்ளார். மதுரை ஆதினம் பயணித்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை விளக்கம்
விபத்து மூலம் தன்னைக் கொல்ல முயன்றதாக மதுரை ஆதினம் புகார் அளித்திருந்த நிலையில், அது சாதாரண விபத்து என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனம் காரில் சென்னைக்கு சென்றபோது, உளுந்தூர்பேட்டை-சேலம் சாலை ரவுண்டானா அருகே, ஆதினம் சென்ற காரும், மற்றொரு காரும் மோதிக் கொண்டன. எனினும், இதுகுறித்து எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை.
தகலறிந்த போலீஸார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்குப் பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக ரவுண்டானா அருகே சென்றபோது, சேலத்தில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதில் மதுரை ஆதினம் பயணித்த காரின் பின்புறம் சிறிய அளவில் சேதமும், மற்றொரு காரின் முன்புறம் சிறிய அளவிலான சேதமும் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பிறகு அவர்களாகவே அந்த இடத்திலிருந்து சென்று விட்டனர்.
இதற்கிடையில், தன்னைக் கொல்ல முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸார் கூறியதாவது: முதல்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதே இந்த விபத்து என்று தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக மதுரை ஆதீனமோ, அவரைச் சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எவ்விதப் புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















