அதிமுக ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.38.94 கோடி இழப்பு - செல்வப்பெருந்தகை
அதிமுக ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.38.94 கோடி இழப்பு - பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் அந்த குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் ஜவாஹிருல்லா, வேல்முருகன், டாக்டர் சரஸ்வதி, சிந்தனைச்செல்வன், பூண்டி கலைவாணன், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனுவாசன் ஆகியோர் வருகை தந்து அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் விழுப்புரம் அருகே கப்பூர் ஆதிதிராவிடர் நல விடுதி, தகைசால் பள்ளியாக தேர்வாகியுள்ள விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் பால் பொருட்கள் தயாரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டனர்.
பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2018-19-ம் ஆண்டில் ஆவின் நிறுவனத்துக்கு வாங்கப்பட்ட கருவிகள், உபகரணங்களை சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாததால் ரூ.26 கோடியே 88 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதுபோல் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய மானியம் வராத வகையில் ரூ.11 கோடியே 52 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர 1 கிலோவாட் சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்ய ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். ஆனால் இங்கு ரூ.3 லட்சம் கொடுத்து சூரிய மின் கலனை கொள்முதல் செய்துள்ளனர். அந்த வகையில் அரசுக்கு ரூ.54 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் அருகே தளவானூரில் 2020 -2021 ல் ரூ.22 கோடியில் கட்டப்பட்ட அணைக்கட்டு, பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு 3 மாதங்களிலேயே சேதமடைந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால் அதுவும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற இழப்புகளுக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்குதான் காரணம். அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் செல்ல தனி வழி இல்லை என்பதை ஆய்வில் கண்டறிந்தோம். உடனடியாக அந்த சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந்திரன், துணை தலைவர் ஷீலா தேவிசேரன், நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், ஆவின் நிறுவன பொது மேலாளர் ரமேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து மாலையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் கலந்துகொண்டு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு
shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்