கயிற்றில் சிக்கிய இளைஞரின் கழுத்து.. எருது விடும் விழாவில் விபரீதம்
எருது விடும் விழாவில் காளையின் கயிறில் இளைஞரின் கழுத்து சிக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன. விழாவுக்கு அனுமதி கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்ட நிலையில் கரோனா தொற்று பரவல் அச்சத்தால் விழா நடத்த தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடும் விழாக்களை நிபந்தனைகளுடன் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காளையின் உரிமையாளர், ஒரு உதவியாளர் என இருவரும் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அல்லது 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.
இவர்களுக்கு மட்டுமே வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் போட்டி நடைபெறும் வளாகத்துக்குள் நுழைய முடியாது.
போட்டியில் பங்கேற்கும் காளைகளின் பதிவுகளை 3 நாட்களுக்கு முன்பே முடித்திருக்க வேண்டும். காளையின் உரிமையாளர், உடன் வரும் உதவியாளர் பெயரை பதிவு செய்ய வேண்டும். எருது விடும் விழா 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்படும்.
எருது விடும் விழாவில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட 22 நிபந்தனைகளுடன் எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி மூஞ்சுர்பட்டுவில் இன்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகளும், வீரர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அந்த விழாவின் போது காளையின் கயிறு ஒன்று இளைஞரின் கழுத்தில் சிக்கியது. மேலும் காளையானது தொடர்ந்து ஓடியதால் கயிற்றில் சிக்கிய இளைஞரை தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்றது. எப்படியோ காளையின் கயிறிலிருந்து ஒருவழியாக இளைஞரை மீட்ட அருகில் இருந்தவர்கள் இளைஞரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
காளையின் கயிறில் சிக்கி தரதரவென இளைஞர் இழுத்து செல்லப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்