crime: சாலையில் கட்டிவைக்கப்பட்டிருந்த மாட்டினால் விபத்து - 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சோகம்
ராமுவின் பின்னால் வந்துகொண்டிருந்த விளாப்பாக்கம் செல்லும் அரசு பேருந்து ராமு மீது மோதியதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வேலூரில் சாலையில் கட்டிவைக்கப்பட்டிருந்த மாட்டினால் ஏற்பட்ட விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் சத்துவாச்சாரி கானார் தெருவை சேர்ந்தவர் ராமு வயது (32). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா, இவர்களுக்கு 2 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராமு கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடைக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அவருடைய வேலையை முடித்துக்கொண்டு ஆற்காடு சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது காகிதப்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் போது சாலையோரம் கட்டப்பட்டிருந்த காளை மாடு ஒன்று திடீரென சாலையின் நடுவே வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத ராமு மாட்டின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் ராமுவின் பின்னால் வந்துகொண்டிருந்த விளாப்பாக்கம் செல்லும் அரசு பேருந்து ராமு மீது மோதியதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகலறிந்து வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்து குறித்து பொது மக்கள் கூறுகையில், “காகிதப் பட்டறை பகுதியில் சுமார் 20, 30 மாடுகள் சுற்றித் திரிகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் சுற்றும் மாடுகளால் பல முறை விபத்து ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு ஒருவர் உயிரே போய்விட்டது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் எந்தவிதை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த நபரின் தந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார்.
இவரை மட்டுமே நம்பி குடும்பம் இருந்தது. அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அரசு அவருக்கு உதவ வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். உயிரிழந்த நபரின் உடலை தழுவி கதறி அழுத தாய் மற்றும் மனைவியின் சோகக்குறல் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இதேபோல் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிராக்டரில் சென்று கொண்டிருந்த நபர்கள் திடீரென குறுக்கே மாடு வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க டிராக்டர் ஓட்டுநர் வைத்துள்ளார். இதனால் டிராக்டர் சாலையில் அருகே உள்ள பள்ளத்தில் தலைகீழ் கவிழ்ந்தது இதனால் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.