TN Rains: திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை - மகிழ்ச்சியில் விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை ( Tiruvannamalai News): சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆரணி, செய்யார், பேருந்து நிலையம், வந்தவாசி, செங்கம், கலசபாக்கம், கண்ணமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் திடிரென மாலை 5 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அவதி பட்டனர்.
மழையின் காரணமாக திருவண்ணாமலை நகரின் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளான அவலூர் பேட்டை சாலை , தண்டராம்பட்டு சாலை, திண்டிவனம் சாலை, கண்ணமங்கலம் பகுதியில், தாமரை குளம் கரையோர குடியிருப்புகள், குடியிருப்பு, உள்ளிட்ட திருவண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை பெய்யும் என ஓரிரு நாட்களுக்கு முன்னரே சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்று இருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவிதமான முன்னேற்பாடுகளையும் செய்யாததால், அப்பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி வருவதால், ஒருநாள் மழைக்கே பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும்.. சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையின் பட்டியல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அதிக அளவாக தண்டராம்பட்டு 21.00 மில்லிமீட்டரும், ஆரணியில் 23.40 மில்லிமீட்டரும், வெம்பாக்கம் 7.00 மில்லிமீட்டரும், வந்தவாசி 5.00 மில்லிமீட்டரும், சேத்துப்பட்டு 18.20 மில்லிமீட்டரும், ஜமுனாமரத்தூர் 0.00 மில்லிமீட்டரும், கீழ்பெண்ணாத்தூர் 18.40, மில்லிமீட்டரும், போளூர் 5.40 மில்லிமீட்டரும், திருவண்ணாமலை 12.50 மில்லிமீட்டரும், கலசபாக்கம் 28.00 மில்லிமீட்டரும், செங்கம் 2.40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்தில் நெல் நடவு செய்யும் அளவிற்கு மழை பொழிந்துள்ளாதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.