திருவண்ணாமலையில் பேருந்து நிலைய கடைக்காரர்கள் கடையை அடைத்து திடீர் சாலைமறியல்
திருவண்ணாமலையில் நகராட்சி அலுவலர்களின் நடவடிக்கையை கண்டித்து பேருந்து நிலைய கடைக்காரர்கள் கடையை அடைத்து விட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பழக்கடைகள், ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் என 60-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கிவருகிறது. இந்த நிலையில் சில நாட்களாக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு திடிர் ஆய்வில் ஈடுபட்டு பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அபராதமும் வித்தியாசமானர். அதனைத்தொடர்ந்து மீண்டும் பிளாஸ்டிக் கவர்கள் பயண்படுத்துவதாக கூறி நகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் சோதனையில் ஈடுபட்டதாகவும், அந்த சமயத்தில் அதிகபட்சமாக ரூபாய் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நகராட்சி அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளுக்கு அலுவலர்கள் அபராதம் விதித்து உள்ளனர்.
அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் கடையை மூடிவிடுவோம் என்று அலுவலர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகாரர்களும் கடைகளை அடைத்து பேருந்து நிலையத்திற்கு வெளியே நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து பேருந்து நிலையம் அருகில் வந்து அலுவலர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் மட்டும் பிளாஸ்டிக் கவர்கள் பயண்படுத்துகிறோமா,அருகில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயண்படுத்துகின்றனர் அவர்களுக்கு எந்த வித அபராதம் அளிக்கவில்லை, பிளாஸ்டிக் கவரில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் மற்றும் குர்குரே சிப்ஸ், லேஸ் பாக்கெட், போன்ற அனைத்து வருகிறது.
இதற்கு உங்களால் அபராதம் விதிக்க முடியுமா என்றும், நாங்கள் அனைத்து வியாபாரிகளும் அரசு கூறுகின்ற 51% உள்ள பிளாஸ்டிக் கவர்களை தான் பயண்படுத்தி வருகிறோம் அனால் நகராட்சி அலுவலர்கள் சோதனை என்ற பெயரில் வந்து ரூபாய் 5 ஆயிரம் வரை அபராதம் விதித்தால் நாங்கள் எப்படி தொழில் செய்ய முடியும். கடை வாடகையும் அதிகரித்துள்ளது நகராட்சி அலுவலர்களின் இந்த நடவடிக்கையால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். தொடர்ந்து காவல்துறையினரும், நகராட்சி அலுவலர்களும் கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் பேருந்து நிலையத்தில் மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.