தவறு செய்த மாணவனை தண்டித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை; ஆசிரியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மாணவர்கள்
ஆரணி அருகே தவறு செய்த மாணவனை தண்டித்த ஆசிரியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது தவறு எனக்கூறி ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சென்ற வாரம் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளி முடிந்து சேவூர் கிராம பகுதியில் சிகரெட் பிடித்து மாணவியரின் முகத்தில் புகை விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அப்பள்ளி ஆசிரியர்கள் திலீப் குமார், வெங்கடேசன், நித்தியானந்தம், பாண்டியன் ஆகியோர் சிகரெட் பிடித்த பள்ளி மாணவனை கண்டித்தும் மற்றும் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர்களை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ் ஆகியோர் பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தினர். அரசு பள்ளி மாணவனை தாக்கியதாக திலீப் குமார் மற்றும் வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்தும், நித்தியானந்தன் என்ற ஆசிரியரை கேளூர் அரசு பள்ளிக்கும் பாண்டியன் என்ற ஆசிரியரை முள்ளண்டிரம் அரசு பள்ளிக்கும் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தர் விட்டார். அதனைத் தொடர்ந்து மாணவன் செய்த தவறை தண்டித்த அரசு பள்ளி ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் மற்றும் ஆசிரியர்களை பணியிடம் மாற்றிய அரசு அதிகாரிகளை கண்டித்து இன்று காலை முதல் ஆரணி- வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் அந்த அரசு பள்ளியை சார்ந்த 700 மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் மறியலின் போது சஸ்பெண்ட் செய்த ஆசிரியர்களை உடனடியாக பணியில் அமர்த்த கோரியும், பணியிட மாற்றம் செய்த ஆசிரியர்களை மீண்டும் தங்கள் பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மாணவ, மாணவிகள் கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மறியலில் ஈடுபட்டதால் ஏராளமான காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ் நேரடியாக சென்று மாணவ, மாணவியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் தொடர்ந்து 5 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் சிறமம் பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.