MK Stalin field visit : ‘கள ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – 24 மணி நேரத்தில் தூக்கி அடிக்கப்பட்ட அதிகாரிகள்’ பரபரப்பு தகவல்கள்..!
’அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வுக்கு செல்லும்போதும் இதே போன்ற அதிரடிகள் தொடரும் என்கிறது கோட்டை வட்டாரம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் வடக்கு மண்டலத்திற்கு ஆய்வு சென்று திரும்பிய 24 மணி நேரத்தில் ஆட்சியர்களும் எஸ்.பியும் வேறு இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டது ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1 மற்றும் 2ஆம் தேதிகளில் ‘கள ஆய்வு’ என்ற பெயரில் வடக்கு மண்டலத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
நேரடி விசிஸ்ட் அடித்த முதல்வர் – திகைத்துப்போன அதிகாரிகள்
முதலமைச்சரே நேரடியாக வந்து சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கேட்கப்போகும் தகவல் கிடைத்த அடுத்த நொடியில் இருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட அதிகாரிகளுக்கும் பதற்றம் பற்றிக்கொண்டது. கொலை, கொள்ளை, மோதல், கலவரம் தொடர்பான புள்ளி விவரங்களையும் சட்டம் ஒழுங்கு பேணி காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் காவல்துறை தொகுக்கத் தொடங்கியது. முதல்வர் என்ன கேட்கப்போகிறார் ? என்ன பதில் சொல்லப்போகிறோம் என்ற பதைபதைப்பு முதல்வர் வேலூர் சென்ற முதல்நாளே அனைவர் முகத்திலும் இருந்தது.
*திட்டங்கள் குறித்த கேள்வி – திக்குமுக்காடிய அதிகாரிகள்
அரசு அறிவித்த திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என முக்கியமான திட்டங்களின் பெயர்களை சொல்லி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அளித்த பதில் முதல்வருக்கு திருப்தியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால், ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் செயல்படவேண்டும் என்று காட்டமாக உத்தரவு போட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கில் கிடுக்குபிடி போட்ட முதல்வர் – நழுவ முடியாமல் தவித்த எஸ்.பிக்கள்
அதேபோன்று, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட சட்டம் ஒழுங்கு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு கொண்டுவந்திருந்த டேட்டாவோடு கேள்விக்கணைகளை மாவட்ட எஸ்.பிக்களிடம் நேரடியாக எறிய, காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வழக்கமான ஆய்வை போன்றே இந்த ஆய்வுகளும் இருக்கும் எண்ணி இருந்த அதிகாரிகளுக்கு என்ன செய்தவன்றே தெரியவில்லை.
ஒவ்வொரு மாதமாக சொல்லி, இந்த மாதத்தில் ஏன் இத்தனை குற்றங்கள் நடந்துள்ளது ? இந்த குற்றங்களை குறைக்க எடுத்த நடவடிக்கை என்ன ? என அடுக்கடுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகள் திணறியுள்ளர். இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர், தமிழ்நாடு நம்பர் 1 பெயரை பேணி காக்க சட்டம் ஒழுங்கு என்பது மிக மிக முக்கியம். ஒவ்வொரு மாவட்டமாக நான் தினமும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்குதான் உங்களை நியமித்திருக்கிறேன். மாவட்டத்தில் குற்றத்தை குறைப்பதும், வன்முறைகள் உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்படும் முன்பே அதனை கண்டறிந்து காவல்துறை தடுக்க வேண்டும் என எஸ்.பிக்களுக்கும், டி.ஐ.ஜிகளுக்கும் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போடுள்ளார்.
24 மணி நேரத்தில் ஆட்சியர்கள் / எஸ்.பிக்கள் மாற்றம்
நிர்வாகம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் ஆட்சியர்களும் எஸ்.பிக்களுக்கும் சொன்ன பதிலில் திருப்தி அடையாத முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ஆய்வை முடித்துவிட்டு சென்னை திரும்பும்போது ஆட்சியர்களையும் எஸ்.பிக்களையும் உடனடியாக மாற்றும்படி தலைமைச்செயலாளர் இறையன்புவிற்கு உத்தரவிட்டிருக்கிறார். அதனால், அவர் ஆய்வை முடித்துவிட்டு திரும்பிய 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆட்சியர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2021 ஜூன் 5ஆம் தேதி திருப்பத்தூர் ஆட்சியராக நியமிக்கப்பட்ட அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்பு இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். அதே போல, ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டராக மாற்றப்பட்டிருக்கிறார். சமூக நலத்துறை பாதுகாப்பு இயக்குநராக இருந்த வளர்மதி ராணிப்பேட்டையின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரம் கலக்கத்தில் உள்ளது.
எஸ்.பி-யையும் மாற்ற சொன்ன முதல்வர் – உடனே உத்தரவிட்ட உள்துறை செயலர்
சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆய்வின் போது புள்ளி விவரங்களை சரியாக தராமலும் கேள்விகளுக்கு நேரடியான பதிலை சொல்லாமலும் மழுப்பியதாக கூறப்பட்ட ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யனும் சென்னை கண்ட்ரோல் ரூம்க்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பியாக சென்னை இணைய குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியாற்றிவந்த, கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, கடலூர் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் மீது புகார்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அவரும் மாற்றப்பட்டு சிலை கடத்தல தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். எஸ்.பி. சக்தி கணேசனை மாற்ற வேண்டும் என்று மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் முதல்வரிடம் வலியுறுத்தியிருந்தார் என கூறப்படுகிறது.
முதல்வரின் அடுத்தடுத்த ஆய்வுகள் – அரண்டு கிடக்கும் அதிகாரிகள்
வடக்கு மண்டல கள ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ள நிலையில், இப்போதே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரிகள் கலக்கமடைய தொடங்கியுள்ளனர். அதனால், சட்டம் ஒழுங்கு பணிகளை போலீசாரும், நிர்வாக பணிகளை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் தங்களது மாவட்டத்தில் முடுக்கிவிட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும்போதும் முதல்வருக்கு அதிகாரிகள் மீது அதிருப்தி ஏற்பட்டால் இந்த அதிரடி மாற்றங்கள் தொடரும் என்கிறது கோட்டை வட்டாரம்.