திருவண்ணாமலை: அரசு பள்ளியின் மேல் தளம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம் - அதிமுக மீது குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா. வேலுவிடம் கூறி பள்ளி கட்டிடங்களை புனரமைப்பு செய்ய கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தடராப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேல்தளம் சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவர்கள் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தடராப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த 2010- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையில் சுமார் 400-க்கும் மேற்பட்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 6- ஆம் வகுப்பு வகுப்பறையில் 20க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் பயின்று வந்தனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் தினகரன் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார்.
அப்போது திடீரென்று கட்டிடத்தின் மேல் தளத்தில் விரிசல் ஏற்பட்டு, எதிர்பாராத விதமாக சிமெண்ட் பூச்சு மாணவர்கள் மீது சரிந்து விழுந்தது. இதில், ஜனார்தனன், தருண்குமார் மற்றும் முகேஷ் என்ற மூன்று மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தினகரன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பலத்த காயமடைந்த மூன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர் இருசக்கர வாகனத்தின் மூலம் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்..
இதில், படுகாயமடைந்த முகேஷ் என்ற மாணவனை மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துமனைக்கு வந்து படுகாயம் அடைந்த மாணவர்களை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த தகவல் அறிந்த செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி உடனடியாக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாணவர்களையும், ஆசிரியரை பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் மருத்துவமனையின் வெளியே இருந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசிய எம்எல்ஏ கிரி, தடராப்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடங்கள் கட்டி 12 வருடங்கள் ஆகிறது. இந்த பள்ளி கட்டிடங்களை கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுகவினர் சரிவர பராமரிப்பு செய்யவில்லை. பள்ளி கட்டிடங்களுக்கு என பராமரிப்பு தொகையை அளிக்காமல் உள்ளனர். அப்படியே பராமரிப்புக்காக அளிக்கப்பட்ட தொகையினை அதிமுக கட்சி பிரமுகர்களே ஊழல் செய்து விடுகின்றனர். இந்த பள்ளி கட்டிட முறைகேடை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்க கூறுகிறேன். மேலும் இந்த சம்பவத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா. வேலுவிடம் கூறி பள்ளி கட்டிடங்களை புனரமைப்பு செய்ய கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்