திருவண்ணாமலை: மாணவர்களை துரத்தித் துரத்தி கொட்டிய தேனீக்கள்; அரசு பள்ளியில் பரபரப்பு..!
அரசு பள்ளி வளாகத்தில் தேனீ க்கள் கடித்து 31 மாணவ, மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்கள் என 36 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
திருவண்ணாமலை அடுத்த அரசு பள்ளி வளாகத்தில் தேனீக்கள் கடித்து 31 மாணவ, மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்கள் என 36 நபர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 13ஆம் தேதி பள்ளிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்று மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்துள்ளனர். பின்னர் பள்ளி வளாகத்தில் வழக்கம்போல் மாணவ, மாணவிகள் தேசீய கீதம் பாடி முடிந்த பிறகு வகுப்புக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது பள்ளியின் மூன்றாம் தளத்தில் எட்டாம் வகுப்பிற்கு சென்ற மாணவர்கள் மின்விசிறியை இயக்கியுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்விசிறியில் சத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் வகுப்பறை அருகே இருந்த தேனீக்கள் கூடு கலைந்து மூன்றாவது மாடியில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை கொட்டியுள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் சிதறி ஓடினர். ஆனாலும் விடாமல் தேனீக்கள் அவர்களை கொட்டியது. குறிப்பாக இதல் பாக்கிய லட்சுமி, மணிமேகலை, பாலு, வெற்றிவேல் ஆகிய 11 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகளை கொட்டியது. மேலும் இதே போன்று பூபதி,மேகலா, சத்தியராஜ், சுதாகரன் ஆகிய 5 ஆசிரியர்கள் என மொத்தம் 36 நபர்களை தேனீக்கள் கொட்டியது. அதனைத் தொடர்ந்து 36 நபர்களும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேன்கூடுகள் கட்டுவது ஒன்றும் புதிதல்ல. இதில் 3 முறை தேன் கூடுகள் கட்டி உள்ளது. அதனை தீயணைப்புத்துறையினர் மூலம் அழிக்கப்பட்டுள்ளது . பள்ளியின் கட்டிடத்தில் எட்டாம் வகுப்பு செயல்பட்டு வரும் மூன்றாவது மாடியில், நான்காவது முறையாக தேன் கூடு கட்டியுள்ளது.
பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை தேனி கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது