தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உட்பட 2 பேருக்கு ஓர் ஆண்டு சிறை
செய்யாற்றில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை.
![தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உட்பட 2 பேருக்கு ஓர் ஆண்டு சிறை Thiruvannamalai court verdict sentencing One year in jail for public works executive engineer who took bribe to give unimpeded testimony TNN தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உட்பட 2 பேருக்கு ஓர் ஆண்டு சிறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/25/afa6a315d4b4601ed182db09c0cdd0e81679727968960109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் நடராஜன் வயது (50). இவர் பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரராக பணிப்புறிந்து வருகிறார். இவர் கடந்த 2008 மற்றும் 2009-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பூதேரி புல்லவாக்கத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டுவதற்காகவும் மற்றும் செய்யாறு அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, பிரசவ பிரிவு, பிரேத பரிசோதனை மற்றும் இதர கட்டிடங்களை கட்டியுள்ளார். இந்த கட்டிட மொத்த ஒப்பந்த தொகை ரூபாய் 2 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 512 ஆகும். அதில் 2 பணிகளுக்கான வைப்புத் தொகை மற்றும் காப்புத்தொகை ரூபாய் 8 லட்சத்து 47 ஆயிரத்து 500 பொதுப்பணித்துறையிடம் உள்ளது. இதனால் கடந்த 2010-ம் ஆண்டு நடராஜன் 2 ஒப்பந்த வேலைகளையும் முடித்துவிட்டு வைப்புத்தொகை மற்றும் காப்புத் தொகை பெறுவதற்காக தடையில்லா சான்று கேட்டு (7-12-2011) அன்று செய்யாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அதிகாரி மாரியப்பா என்பவரை சந்தித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவரிடம் ரூபாய் 50 ஆயிரம் மற்றும் பெயர் குறிப்பிடாத காசோலை ரூபாய் 1 லட்சம் ஒன்றை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தொழில் நுட்ப உதவியாளர் தமிழ்செல்வியை அணுகிய போது ரூபாய் 5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் வைப்புத் தொகை மற்றும் காப்புத் தொகையை விடுவிக்க தடையில்லா சான்று வழங்குவதாக தெரிவித்து உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நடராஜன் லஞ்சம் கொடுத்து தடையில்லா சான்றிதழ் பெற விருப்பம் இல்லாததால் உடனடியாக (25-1-2012) அன்று வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் ரசாயனம் தடவப்பட்ட 5 ஆயிரம் ரூபாயை நடராஜனிடம் கொடுத்தனுப்பட்டது. செய்யாறு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் மறைந்து இருந்தனர்.
அப்போது நடராஜன் செயற்பொறியாளர் மாரியப்பா மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் தமிழ்செல்வி ஆகியோரிடம் லஞ்சப்பணம் பெறும் போது ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இருவரிடமும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். அதனையடுத்து இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட மாரியப்பா மற்றும் தமிழ்செல்வி ஆகியோருக்கு தலா 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் உள்ள அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)