கடன் தள்ளுபடி செய்தும் ரூ.12 ஆயிரம் செலுத்த நோட்டீஸ் - விவசாயி அதிர்ச்சி
தென்கரும்பலூரில் கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட விவசாயிக்கு ரூபாய் 12 ஆயிரம் கடன் செலுத்த நோட்டீஸ் வந்ததால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தென்கரும்பலூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திகேயன் வயது (36) விவசாயி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தென்கரும்பலூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெற்று உள்ளார். கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு பயிர் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்து அறிவித்தது. அதன்படி கார்த்திகேயன் வாங்கிய பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழை வங்கி அதிகாரிகள் கார்த்திகேயனிடம் வழங்கியுள்ளனர். அதன்பிறகு கார்த்திகேயன், பயிர் செய்வதற்கு தேவைப்படும் பணத்துக்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று பயிர் கடன் கேட்டுள்ளார். அப்போது வங்கி அலுவலர், உங்களுக்கு கடன் உள்ளது. அதனை கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடையந்த கார்த்திகேயன், “நான் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு விட்டது. எனக்கு வங்கியில் எந்தவித கடனும் இல்லை” என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் உங்கள் மீது ரூபாய் 12 ஆயிரம் கடன் உள்ளது என்றும், அதனை கட்ட வேண்டும் என்றும் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகம் கார்த்திகேயன் வீட்டிற்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது. அதனைக்கண்டதும் கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர், கார்த்திகேயன் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார். ஆனால் மாவட்ட கூட்டுறவு தலைமை அதிகாரிகள் யாரும் இதுவரையில் கார்த்திகேயன் அளித்த புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் வாணாபுரம் காவல் நிலையத்தில் சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.
புகார்மனுவில் கூறியதாவது;
அதில், ‘நான் தென்கரும்பலூர் கிராமத்தை சார்ந்த விவசாயி நான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கடன் இருந்தது அந்த கடனை தமிழக அரசு கடனை தள்ளுபடி செய்துள்ளது. அதற்கான ரசீதும் அளித்துள்ளனர். இதனால் எனக்கு எந்த விதமான கடன் இல்லை. ஆனால் என் மீது கடன் உள்ளது என்றும், அதனை செலுத்த வேண்டும் என்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் பெறாத விவசாயின் மீது கடன் பெற்றதாக கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.