கீழ்பென்னாத்தூரில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் 2 லட்சமாவது மையம் - முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக்கல்வி என்னும் சிறப்பு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 2 லட்சமாவது மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவங்கி வைக்கிறார் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்று பயணமாக இன்று திருவண்ணாமலைக்கு வருகிறார். பின்னர் அவர் இன்றும், நாளையும் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல்வர் வருகை தருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் சிறப்பான வகையில் நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக்கல்வி என்னும் சிறப்பு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்ததிட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது வரை 1 லட்சத்து 99 ஆயிரத்து 999 மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி ஊராட்சியில் 2 லட்சமாவது இல்லம் தேடிக்கல்வி மையத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைபள்ளியின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் அரசு விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளி கல்வித்துறை, நீர்வள ஆதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பாக புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் பொது மக்கள் திரளாக பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்