திருவண்ணாமலையில் செயல்பாட்டுக்கு வந்த 'ஸ்மார்ட் காவலர்' ஆப் - செயலியில் என்ன இருக்கும் ?
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றம் நடைபெறமால் தடுக்க ரோந்து செல்லும் போலீசாரின் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், புதிதாக செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார்.
தமிழக காவல்துறையில் புதிதாக 'ஸ்மார்ட் காவலர் இ- பீட்' முறையானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையானது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 காவல்துறை உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை நகரம், தண்டராம்பட்டு, போளூர், வந்தவாசி, செய்யாறு, செங்கம், ஆரணி நகரம் ஆகிய காவல் நிலையங்களில் நேற்று மாலை 5 மணி முதல் ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் இ- பீட் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலியை சம்பந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் செல்போனில் பதிவேற்றம் செய்து அதன் செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
செயலியில் என்ன இருக்கும் ?
குற்றம் நடைபெறும் இடங்கள், காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துவிட்டு வெளியூர் செல்பவர்களின் வீடுகளின் முகவரி, ரவுடிகளின் தங்கும் இடங்கள் ஆகியவை அந்த செயலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும், தினமும் காவலர்கள் அந்த பகுதிக்கு ரோந்து சென்று கண்காணிக்கிறார்களா, என்பது குறித்து இந்த செயலி லொகேஷன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.
கண்காணிப்பை எளிமையாக்கும்...!
இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகர காவல் பகுதிகளில் உள்ள குற்றச் சம்பவம் நடைபெறலாம் என்ற பகுதிகள், இடங்களும் இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆரணி இடங்களும் , செய்யார் இடங்களும் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் இரவு பணிக்கு அமர்த்தப்படும் காவலர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டும் பணியை சரியாக செய்கிறார்களா , காவலர்கள் எங்கெங்கே சென்றார்கள் என்பது குறித்த விவரம் , மறுநாள் காலை டேஷ்போர்டு என்ற பகுதியில், அறிக்கையாக உயர் அலுவலர்களுக்கு சமர்ப்பிக்கும், இதன் மூலம் காவலர் ஒருவர், பணியை சரியாக செய்யவில்லை என்றால், உடனடியாக கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க எளிமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு எப்படி உதவும் ?
ஒரு பெரிய குற்றச்செயல் நடைபெறுகிறது என எடுத்துக் கொள்வோம். அதனை சமாளிக்க போதிய காவலர்கள் இல்லை என்றால், எமர்ஜென்சி என்ற பொத்தனை அழுத்தினால், அருகில் இருக்கும் காவலர்களுக்கு இந்த செயலி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். உடனடியாக அப்பகுதிக்கு மற்ற காவலர்கள் சென்று நடவடிக்கை எடுக்க இது உதவும்.
இந்த செயலி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:
இந்த திட்டத்தில் இரவு மற்றும் பகல் ரோந்து செல்லும் காவல்துறையினர் ஸ்மார்ட் காவலர் என்ற செல்போன் செயலியில் தனது ரோந்து பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையம், வங்கி, பூட்டிய வீடுகள் மற்றும் பிற முக்கிய பகுதிகளுக்கு சென்று தணிக்கை செய்யும் போது அதன் விவரங்களை ஆன்லைன் முறையில் இந்த செயலியின் மூலமாக பதிவேற்றம் செய்வர். குற்றம் நடைபெறும் இடங்கள் மேலும் அவரவர் சரகத்தில் உள்ள கெட்ட நடத்தைக்காரர்கள், வரலாற்று பதிவேடு குற்றவாளிகள், சந்தேக நபர்கள் ஆகியோர்களின் நடவடிக்கைகளை செல்போன் செயலி மூலம் கண்காணிக்கலாம்.
காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக விளங்கும் ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் ஆகியோர் ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் கண்காணித்து காவல்துறையினருக்கு அவ்வபோது உத்தரவுகளை பிறப்பித்து தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அடிக்கடி குற்றம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள், மூத்த குடிமக்கள் தனியார் வசிக்கும் வீடுகள் மற்றும் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது பூட்டிய வீடுகள் பற்றிய விவரங்கள் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து சென்றால் அவ்விடங்கள் பற்றிய விபரங்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பு உறுதிபடுத்தப்பட்டு குற்றம் நடைபெறமால் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.