13 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணாமலையார் கோயில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி வகுப்பு: நேர்முக தேர்வு மாணவர் சேர்க்கை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சைவ சமய அர்ச்சகர் பயிற்சி பள்ளி வகுப்பு மாணவர் சேர்க்கை நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி தொடங்கப்படுகிறது. அதனையொட்டி, மாணவர்கள் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.சாதி வேறுபாடு இல்லாமல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பை வழங்குவதற்காக, சென்னை பார்த்த சாரதி கோயில், திருவரங்கம் கோயிலில் வைணவ பயிற்சியும், திருவண்ணாமலை, மதுரை, பழனி, கோவில்களில் சைவ சமய பயிற்சி பள்ளியும் கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு இந்த பயற்சியில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு இப்பயிற்சி பள்ளிகள் செயல்படவில்லை.இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி முடித்த 28 நபர்களுக்கு கோயில்களில் அர்ச்சராக பணிபுரிவதற்கான ஆணைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகள் தொடங்க, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சைவ தேர்வை நடத்தினர். சமய அர்ச்சகர் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில், 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்து மதத்தை சார்ந்த, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 14 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இந்த பயிற்சிகள் பெற தகுதியுள்ளவர்கள்.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு, சீருடை, மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை என அனைத்தும் வழங்கப்படும்.இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செயல்படும் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி பள்ளி மாணவர் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு நேற்று கோயிலில் நடைபெற்றது.
அண்ணாமலையார் கோவிலின் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், உதவி ஆணையர்கள் ராஜேந்திரன். சந்திரசேகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.ஜோதிலட் சுமி, தமிழ்த்துறை பேராசிரியர் ராஜமாணிக்கம், கோயில் சிவாச்சாரியார்கள் ஆகியோர் இந்த தேர்வை நடத்தினர். இந்த தேர்வில் பங்கேற்க 32 மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 மாணவர்கள் கலந்து கொண்டனர். காலியாக உள்ள இடங்களுக்கு தகுதியுள்ள மாணவர்கள் சேர விரும்பினால் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிய, வேத பாட ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடந்தது. மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல் முடிந்துள்ள நிலையில், விரைவில் பயிற்சிப்பள்ளிகள் செயல்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது