திருவண்ணாமலையில் போலீஸ் நடத்திய வாகன சோதனை - கஞ்சா, திருட்டு செயல்களில் ஈடுபட்ட 8 பேர் கைது
செய்யாறு, திருவண்ணாமலை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் மற்றும் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 2 பேரை தேடிவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு துணை காவல்கண்காணிப்பளர் செந்தில் உத்தரவின்பேரில் செய்யாறு, தூசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், பாஸ்கரன், சிலம்பரசன் ஆகியோர் நேற்று கஞ்சா விற்பனை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்ன ஏழாச்சேரியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், செய்யாறு அடுத்த வடதண்டலம் அரசு கல்லூரி மைதானம், பைபாஸ் சாலை, பஸ் நிலையம் பின்புறம், வெங்கட்ராயன்பேட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வடதண்டலத்தை சேர்ந்த வேலியப்பன் வயது (20), கீழ்புதுப்பாக்கத்தை சேர்ந்த விகல் (23), கொடநகரை சேர்ந்த கோபி (22), கன்னியம் நகரை சேர்ந்த மணி (28), வெங்கட்ராயன்பேட்டை புள்ளிமான் ராஜா (30) ஆகியோர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. அவர்கள் 5 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோன்று திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை பகுதி, செங்கம் சாலை சந்திப்பு அருகே கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்த நபர்கள், காவல்துறையினரை கண்டதும் தாங்கள் வைத்திருந்த பையை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பையை சோதனை செய்ததில் 400 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள், அடிஅண்ணாமலை கிராமத்தை சேர்ந்த ஹரி (40), சமுத்திரம் பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா காவல்நிலையத்தில் வழக்குப்பதிந்து தப்பியோடிய 2 நபர்களையும் தேடிவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த குணக்கம்பூண்டி கிராமத்தில் வேம்புலி அம்மன் கோயில் உள்ளது. 10ம் தேதி இரவு இக்கோயிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தேசூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வந்தவாசி சப்-டிவிசன் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் தணிகைவேல் தலைமையில் காவலர்கள் முருகன், ஏழுமலை ஆகியோர் நேற்று மாலை தேசூர்- வந்தவாசி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். மேலும், பைக்கை சோதனை செய்ததில் ₹2 ஆயிரம் சில்லரை நாணயம், இரும்பு ராடு ஆகியவை இருந்தது. இதையடுத்து, 2 நபர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் தேசூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் வயது (22) மற்றும் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும், குணக்கம்பூண்டி கிராமத்தில் அம்மன் கோயில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணம் திருடியவர்கள் என்பதும் தெரிந்தது. இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிந்து 2 நபர்களையும் கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி 16 வயது சிறுவனை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சதீஷ்குமாரை வந்தவாசி கிளை சிறையிலும் அடைத்தனர்.