மேலும் அறிய
Advertisement
காட்டிக்கொடுத்ததால் கொலையா? கஞ்சா வியாபாரி டீல் இம்தியாசைத் தேடி தீவிர தேடுதல் வேட்டை..!
தற்போது, சென்னையில் தலைமறைவாக இருக்கும் டீல் இம்தியாஸ் பிடிக்கத் தனிப்படை விரைந்துள்ளது. சி.சி.டி.வி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார் .
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம் (வயது 43) வசீம் அக்ரமுக்குத் திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இணை செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த வசீம் அக்ரம் வாணியம்பாடி நகரமன்ற முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார். மேலும் வாணியம்பாடி பகுதியில் சமூக செயல்பாட்டாளராகவும் இருந்துள்ளார் . இந்நிலையில், நேற்று மாலை தனது குழந்தைகளுடன் அருகிலுள்ள பள்ளி வாசலுக்குச் சென்று தொழுகை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த வசீம் அக்ரமை காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென சுற்றி வளைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் வசீம் அக்ரமின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட உடலை வாணியம்பாடி மருத்துவமனைக்குக் கொண்டு வருமாறுகூறி வாணியம்பாடி-வேலூர் சாலையில் மறியல் செய்தனர். இதையடுத்து, வசீம் அக்ரமின் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, நேற்று இரவு காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் அதிவேகமாக வந்த காரை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் இருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் வாகனத்திலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர் . போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் வண்டலூர் ஓட்டேரியைச் சேர்ந்த பிரசாந்த் என்கிற ரவி, முகலிவாக்கத்தைச் சேர்ந்த டில்லிகுமார் எனத் தெரியவந்தது.
விசாரணையில், இந்த கும்பலுக்கு வசீம் அக்ரமின் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. மேலும் கொலைக்குப் பயன்படுத்திய 11 ரத்தக்கறை படிந்த பட்டாக் கத்திகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனிடையே, வசீம் அக்ரமின் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் ‘‘ஜீவா நகரில் வசித்துவரும் டீல் இம்தியாஸ் என்பவர் கஞ்சா விற்பனை, ரவுசியிசம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவந்த நிலையில், கடந்த ஜூலை 26-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில், எஸ்.பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் ஜீவா நகரிலுள்ள டீல் இம்தியாஸின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக் கத்திகள், 10 செல்போன்கள் சிக்கின. இதுதொடர்பாக, டீல் இம்தியாஸின் கூட்டாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். டீல் இம்தியாஸ் கஞ்சா கும்பலின் தயவுடன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் முன்னாள் கவுன்சிலரும் சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் இருப்பதாகவும், அவர்தான் போலீஸுக்குத் தகவல் கொடுத்ததாகவும் டீல் இம்தியாஸுக்கு தகவல் தெரியவந்துள்ளது .
இதன் அடிப்படையில் டீல் இம்தியாஸின் ஆதரவாளர்கள் வசீம் அக்ரமிற்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். சமீபத்தில் ஒருநாள் வசீம் அக்ரமின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தும் டீல் இம்தியாஸின் கைக்கூலிகள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. பாதுகாப்புக்கோரி ஏற்கெனவே வசீம் அக்ரம் காவல்துறையினரை அணுகியிருக்கிறார். இந்தச் சூழலில்தான் அவர் கொலைச் செய்யப்பட்டிருக்கிறார். இவ்வழக்கில் மொத்தம் 14 பேருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தற்போது, சென்னையில் தலைமறைவாக இருக்கும் டீல் இம்தியாஸ் பிடிக்கத் தனிப்படை விரைந்துள்ளது. சி.சி.டி.வி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார் .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion