தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று 20 நபர்களுக்கு மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் 8.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக எம்ஆர்ஐ ஸ்கேன் சென்டர் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 14 துணை சுகாதார கட்டிடங்கள் 4 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டவைகளை பொது மக்களின் பயன்பாட்டிற்க்காக இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மருத்துவ கட்டமைப்பை வேகமாக மேன்படுத்திடும் வகையில் அறிவுறுத்தியுள்ளார். அந்தவகையில் தமிழ்நாட்டில் இருக்கிற துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 8713 ஆரம்ப சுகாதார எண்ணிக்கை 2286, இதில் 1000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சிதலம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
1500 கட்டிடங்கள் வாடகை கட்டிடங்களில் இருக்கிறது. எந்த மருத்துவமனைக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் என்பதனை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று அதனை புதுப்பித்து கட்டி தருகிற பணியினை இந்த துறை செய்து வருகிறது. திருப்பத்தூர் தலைமை மருத்துவமனைக்கு தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கூடிய புதிய கட்டிடம் ரூ.56 கோடியில் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. சிங்கப்பூர், கேரள மாநிலத்தில் தற்போது புதிய வகை ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இதை தமிழ்நாட்டில் கட்டுபடுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் இந்த ஒமைக்ரான் தொற்று 20 நபர்களுக்கு மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை தொற்றை தடுக்கும் வகையில் கேரள மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக உள்ள மருத்துவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளது. மேலும் 983 மருந்தாளுநர்கள், 2242 செவிலியர்கள் 1546 சுகாதார ஆய்வாலர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். 11 செவிலியர் கல்லூரிகள் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அமைக்கப்பட உள்ளது. கொரானோ நேரத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் எனவும் வழங்கக் கூடாது எனவும் பல தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கான தீர்வும் உடனடியாக எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட இயக்குனர் செல்வராசு, அரசு அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்