கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் இன்றி நடந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
’’நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்’’
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்த பிலவ ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்று விழா வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதி காலை திருக்கோவிலில் அண்ணாமலையார் சன்னதியின் முன்புறம், 64 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி முக்கிய விழாவான வெள்ளித் தேர் திருவிழா நவம்பர் 15 ஆம் தேதியும், மகா ரதம் என்னும் பஞ்ச மூர்த்திகளின் மகா தேரோட்டம் நவம்பர் 16 ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்தத் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் காலை இரவு என இரு வேளைகளிலும் சுவாமி அம்பாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தல் அமைத்தல், சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல் மற்றும் வர்ணம் தீட்டுதல், தேர்கள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக இன்று காலை திருக்கோவிலில் உள்ள சம்பந்த கணேசருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
பின்னர் சம்மந்த கணேசர் சந்நதியில் பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. திருக்கோவிலின் உள்ளே ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தமிழகத்திலேயே இரண்டாவது உயரமான ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபம் வளாகத்தில் காலை 05:41 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க உத்திராட நட்சத்திரம் சிம்ம லக்னத்தில், பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் இந்த ஆண்டு பக்தர்களின்றி சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டு பந்தக்கால் முகூர்த்தம் விழாவினை நடத்தினர். இந்த விழாவில் திருக்கோவில் இணை ஆணையர் (கூடுதல்) அசோக்குமார் , மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.