எல்லையில் அந்நியர்கள் ஊடுருவலை காட்டிக்கொடுமா இந்த கருவி? அரசுப்பள்ளி மாணவன் கண்டுபிடித்த சாஃப்ட்வேர்..
இந்திய எல்லையில் அந்நியர்கள் நுழைவதை உடனடியாக தெரிவிக்கும் வகையிலும், மின்சாதன பொருட்களில் ஏற்படும் தீயினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் எனவும் அரசு பள்ளி மாணவன் புதிய மென்பொருளை கண்டுபிடித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.மேலும் பள்ளி கல்லூரிக்லுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவன் கொரோனா கால விடுமுறையை வீணாக்காமல் விஞ்ஞான ரீதியாக புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள் இதற்கும் உதாரணமாக மாவட்டம் தச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9- ம் வகுப்பு மாணவன் இளம் விஞ்ஞானியாக உருவாகி வருகிறார்.
இந்த மாணவன் மக்கள் மனதில் இடம் பிடிக்கவும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வழியில் நாட்டு பற்றுடன் நாட்டு மக்களுக்கும் ராணுவத்திற்கும் பயன்படும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அறிமுகப்படுத்தியும் வருகிறார். யார் அந்த மாணவன்?
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி கலைவாணியும் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் மகன் ஜவகர் வயது (15), இவர் தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி மாணவன் சிறுவயதில் இருந்தே நாம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பல்வேறு சிறிய சிறிய சாதனங்களை கண்டுபிடித்துள்ளார். நமது நாட்டில் எல்லைப்பகுதியில் அந்நிய சக்திகளான எதிரிநாட்டினர் நமது நாட்டில் நுழையாத வகையில் ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பயன்படும் வகையிலும் நமது நாட்டின் மீது உள்ள பற்றிலும், ஒரு அந்நிய நபர் எந்த வகையில் வருகிறார் எவ்வளவு தூரத்தில் வருகிறார் என்பதைக் கண்டறியும் வகையில், மாணவன் கண்டுபிடித்துள்ள கருவியின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் அதன்மூலம் அதிகளவில் ஏற்படும் உயிரிழப்பு உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கி அதன்மூலம் மின்சாதனங்களில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கவேண்டும் என்று மாணவன் ஜவஹருக்கு தோன்றியது. இந்த இரண்டு கருவிகளையும் உருவாக்கும் முயற்சியில் கடந்த 2 வருடங்களாக ஈடுபட்ட அவர், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தானாக இயங்கி தீயை அணைக்கும் கருவி ஒன்றையும் கண்டுபிடித்தார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவிகள் குறித்து ABPNADU குழுமத்திற்கு மாணவர் ஜவஹர் கூறுகையில்
நமது நாடு இந்திய எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஒரு மென்பொருள் சாதனம் கண்டுபிடித்துள்ளேன். இதில் அந்நியர்கள் நுழைவதை உடனடியாக தெரிவிக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஊடுருவுவதை தடுக்கவும் ஒரு கருவி கண்டுபிடித்துள்ளேன். தற்போது கண்டுபிடித்துள்ள மென்பொருள் கருவி 10 மீட்டர் வரை அந்நியர்கள் வருவதை தெரியப்படுத்தும் வகையில் உள்ளது. அதனை மேம்படுத்தினால் 50 கிலோமீட்டர் வரை அந்நியர்கள் ஊடுருவலை கண்டுபிடித்து தடுத்துவிடலாம் என்றும் மேலும் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் எல்லை மீறி கொண்டு வரப்பட்டாலும் அதனை இந்த கருவி காட்டிக் கொடுத்துவிடும் என்று மாணவர் விளக்கம் அளித்தார். மேலும் இந்த கண்டுபிடிப்பை இந்திய ராணுவத்திற்கு ஒப்படைக்வும் உள்ளேன் என்று தெரிவித்தார்.
அதேபோல் பொதுவாக ஏ.சி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட எந்திரங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதன் மூலம் ஏற்படும் வாயுக்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் சென்சார் மூலம் செயல்படும். எந்திரத்தில் தீ ஏற்படும்போது உடனடியாக எந்திரத்திற்கு வரும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அடுத்த வினாடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்துகிறது. தானியங்கி முறையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
நமது நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் தண்ணீர் பஞ்சதை போக்கும் வகையில் தண்ணீரை சிக்கனமாக பயண்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு ஏற்றாற்போல் பயிர்கள் தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டால் தானாக தண்ணீர் வந்து ஊற்றும் வகையில் ஒரு மென்பொருளை கண்டுபிடித்து வருகிறேன் என்றும், எனது வருங்காலங்களில் நான் சிறியதாக ஒரு ஆய்வுகூடத்தை ஏற்படத்தி நமது நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பயனுள்ளவற்றை உருவாக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.