எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து தந்தை, மகள் உயிரிழப்பு.. வேலூரில் பெரும் சோகம்..
வேலூரில் விடியற்காலை எலக்ட்ரிக்கல் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் வீட்டிலிருந்த மற்ற இருசக்கர வாகனங்கள் தீப்பற்றியது.
வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவில் வசிப்பவர் ஃபோட்டோகிராப்பர் துரைவர்மா வயது 49. இவரது மகள் மோகன பிரீத்தி வயது 13. இவர் போளூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில் துரைவர்மா இரண்டு நாட்களுக்கு முன்பு புதியதாக எலெக்டிரிக்கல் பேட்டரியில் ஓடும் எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை இரண்டு நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து இன்று விடியற்காலை துரைவர்மா தனது வீட்டினுள் நிறுத்தி ரீசார்ஜ் செய்ய முயன்றுள்ளார். அப்போது வீட்டில் உள்ளே அவருடைய மகள் மோகன பிரீத்தியும் உடன் இருந்துள்ளார். அப்போது எலெக்ட் ரானிக் ஸ்கூட்டர் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது.
இதனால் அங்கு அருகில் இருந்த மற்ற இரண்டு சக்கர வாகனங்களும் தீப்பற்றி அந்த வாகனங்களும் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த துணிகள் அனைத்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இந்த தீயில் மாட்டிக்கொண்ட துரைவர்மாவும் அவரது மகள் மோகன பிரீத்தியும் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு முயன்றுள்ளனர். ஆனால் தீ மளமளவென வீடு முழுவதும் தீப்பற்றியதால் கழிவறைக்குள் நுழைந்து தப்பிக்க முயன்ற இடத்திலேயே தீயில் சிக்கி தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் உடல் கருகி பலியானார்கள்.
மேலும் தீப்பற்றி எரிந்து உடன் அருகில் இருந்த பொதுமக்கள் தீயினை அனைக்க முயன்றுள்ளார். ஆனால் தீ அவர்களால் அனைக்கமுடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் தீயணைப்பு துறையினர் அனைத்து முடிவதற்குள் ஸ்கூட்டர்கள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது. மேலும் இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். மேலும் இரண்டு கருகிய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் புதிய எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர் வாங்கிய மகிழ்ச்சியில் இருந்த தந்தையும் மகளும், அதன் காரணமாகவே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.