திருவண்ணாமலையில் 3 ஊராட்சிகளில் ரூ.5 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
அய்யம்பாளையம் உட்பட 3 ஊராட்சிகளில் ரூ.5 கோடியே 3 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டம் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையம், அடி அண்ணாமலை, தேவனந்தல் உள்ளிட்ட ஊராட்சிகளில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கடந்த, 2 ஆண்டு காலமாக திராவிட மாடல் என்ற சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மக்களை தேடி வந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை மற்றும் தேவனந்தல் ஊராட்சிகளில் மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்.
மேலும் 15-வது நிதி குழுவிலிருந்து ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை, ஊராட்சி மன்ற புதிய கட்டிடம், மரக்கன்றுகள் நடுவது, குடிநீர் குழாய், கழிவுநீர் பக்க கால்வாய் பள்ளி சுற்றுச்சுவர் அமைப்பது. பண்ணை குட்டை அமைப்பது, அங்கன்வாடி புதிய கட்டிடம் மற்றும் பயனியர் நிழற்குடை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதேப் போல் இந்த திராவிட மாடல் ஆட்சி அமைந்த உடன் மகளிர சுய உதவி குழு கடன் தள்ளுபடி மற்றும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் உயர்கல்வி கற்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைக்க இருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என்கிற அடிப்படையில் அய்யம்பாளையம் ஊராட்சியில் ரூ.1 கோடியே 20 லட்சமும் அடிஅண்ணாமலை ஊராட்சியில் ரூ.2 கோடியே 25 லட்சம் மற்றும் தேவனந்தல் ஊராட்சியில் ரூ 1 கோடியே 58 இலட்சம் என மொத்தம் ரூ.5 கோடியே (03 இலட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டம் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஊராட்சிகளில் பணிகள் நடைப்பெற்று வருகிறது. மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வருவாய்த்துறையின் மூலம் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை பெற்று தருதல், பட்டா, சிட்டா மற்றும் பல்வேறு துறையின் மூலமாக வரப்பெற்றுள்ள கோரிக்கைகளான புதியதாக நீர்தேக்கத்தொட்டி, கழிவறைகள் வசதி அமைத்து தருதல் சிமெண்ட் சாலை அமைத்து தருதல், புதிதாக தெருவிளக்கு அமைத்து தருதல், மின் இணைப்பு புதிய வீடு கட்டி தருதல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் காதொலி கருவி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்று கோல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கை மனுக்கள் மீது தகுதியின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு கட்டாயமாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும். ஏற்கனவே அடிஅண்ணாமலை ஊராட்சியில் கல்குவாரிகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மாற்றுத்தொழில் அமைத்து கொள்ளும் வீதமாக அவர்களுக்கு புதிதாக தொழில் தொடங்குவதற்கு வங்கிக்கடன்கள் வழங்க நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.