திருவண்ணாமலையில் 1900 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.4.75 லட்சம் செலவில் வளைகாப்பு - துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி
தமிழக முதல்வர் தாய்மார்கள் மகப்பேறின் போது ஏற்படும் இறப்பு சதவிகித்தை குறைக்கும் வகையில் மருத்துவத்துறையில் சிறப்பான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தெரிவித்தார்.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலன் மற்றும் மகளிர உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்குகான சமுதாய வளைகாப்பு மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவினை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி பேசுகையில், "தமிழ்நாட்டில் ஆண்டுதோறும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண்களின் ஆரோக்கியத்திற்காகவும் தனிகவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவி தொகையாக 3 கட்டங்களாக ரூ. 6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 18 ஆயிரம் மகப்பேறு பெறுவதற்கு வசதியாக காப்பிணி தாய்மார்களுக்கு தாய்யுள்ளத்தோடு வழங்கி வருகிறார். கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பதற்காக இதுபோன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் கருவுற்றதாய்மார்கள் மகிழ்ச்சியான சூழலில் ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2127 அங்கன்வாடி மையங்களில் 12714 கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். நமது மாவட்டத்தில் 1900 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 4.75 இலட்சம் செலவில் வளைகாப்பு நடத்தப்பட உள்ளது. அதன் தொடக்கமாக, இன்று திருவண்ணாமலையில் 550 மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது.
தாயுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் வகையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மகிழ்வுடன் குழந்தைகளை பெற்றேடுக்க இது போன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார். நம் தமிழ்நாடு அரசு அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான ஆரோக்கியமான உணவு மற்றும் சூழலை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனைகள் மேற்கொள்ள பிற மாவட்டங்களுக்கும் மற்றும் மாநிலங்களுக்கும் செல்லும் சூழ்நிலையை மாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் நமது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமணையில் ரூ. 15 கோடி மதிப்பில் பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவக் கருவிகள் மற்றும் பரிசோதனை கருவிகள், புதிய கட்டடங்கள் போன்று என்னற்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்ாழ்வு துறை இணைந்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைப்பாட்டை
போக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதி ஒதிக்கீடு செய்து மகப்பேறின் போது ஏற்படும் இறப்பு சதவிகித்தை குறைக்கும் வகையில் மருத்துவத்துறையில் சிறப்பான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். எனவே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில் பாரம்பரிய உணவு திருவிழா குறித்து ஏற்படுத்தப்பட்ட கண்காட்சியினை பார்வையிட்டார். 150 வகையான சிறு தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் மற்றும் கீரை சூப்பு வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய உணவு திருவிழாவில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பங்குபெற்ற அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் ஐந்து வகையான கலவை சாதம், அறுசுவை உணவு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி அவர்களது கையால் பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) திருவண்ணாமலை கிராமபுறம் நெ.சரண்யா. உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலர்கள் உடனிருந்தனர்.