காலதாமதமாக செலுத்தப்பட்ட வருமான வரி: வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜர்
வருமான வரி காலதாமதமாக செலுத்தியதாக தொடரபட்ட வழக்கில் வேலூர் ஜே.எம்.1 கோர்ட்டில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜரானர்.
வேலூர் (Vellore News ) கடந்த 2012 13-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் 2015-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி தாக்கல் செய்துள்ளார். 2016-ஆம் ஆண்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், 1 கோடியே 4 லட்சத்து 94-ஆயிரம் வருமான வரியை செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில், உரிய காலத்துக்குள் வரியை செலுத்தவில்லை என்பதற்காக அவர் மீது ஏன் குற்ற வழக்கு தொடரக்கூடாது என்பதற்கு விளக்கம் அளி்க்கும்படி வருமான வரித்துறை உதவி ஆணையர் கடந்த 2016 மார்ச் 11-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்துள்ளார். இந்த நோட்டீஸூக்கு கதிர் ஆனந்த் பதிலளிக்காத நிலையில், அவருக்கு எதிராக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் சார்பில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017-ம் ஆண்டு கதிர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக வழக்கு தொடர முடியாது என்று கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 11 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பும் வரை, வருமான வரி செலுத்தவில்லை என்பதால், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கு வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமான வரிக் கணக்கை வேண்டுமென்றே உள் நோக்கத்தோடு தாமதமாக வருமான வரி செலுத்தினாரா? என்பதை விசாரணையை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக் கூறி கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வேலூர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜர்
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும் படி வேலூர் நீதிமன்றம் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் கதிர் ஆனந்த் ஆஜர் ஆகாததால் கதிர் ஆனந்துக்கு பிடிவாரண்ட் அனுப்பப்பட்டது. இதனால் இன்று கதிர் ஆனந்த் ஜே.எம் 1 நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கு தொடர்பாக கதிர் ஆனந்த் தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்ததின் அடிப்படையில் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.”