சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் - 3 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
’’தற்போது அணையில் உள்ள ஷட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் பழுதடைந்துள்ள 20 ஷட்டர்களை மாற்றும் பணியானது நடைபெற்று வருகிறது’’
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமடைந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை நீரானது உயர்ந்து வருகிறது. திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாய விளைநிலங்கள் பயன்பெறும் வகையிலும் சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலது புற கால்வாய்யை செங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி திறந்து வைத்தார். இதன் மூலம் 88 ஏரிகளும் 12,152 விவசாய விளை நிலங்களும் பயன்பெறும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 119 அடியாக இருக்கும் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சாத்தனூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து வினாடிக்கு 1343 கன அடியாக உள்ளது. தற்போது அணையில் உள்ள ஷட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் பழுதடைந்துள்ள 20 ஷட்டர்களை மாற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. ஷட்டர்கள் மாற்றும் பணி நடைபெறுவதால் அணையில் 99 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும் என்பதால் தற்போதைய நிலைப்படி அணையின் நீர்மட்டம் 97.45 அடியை எட்டியுள்ளது அணைக்கு வரக்கூடிய நீரான 1343 கன அடி தண்ணீரை இடது மற்றும் வலது கால்வாயின் கீழ் உள்ள 88 ஏரிகளை நிரப்ப அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 12152 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பயன்பெறும்.
இதனை தொடர்ந்து செங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி செய்தியாளர்களிடம் பேசுகையில்;
திமுக ஆட்சி பொறுப்பேற்ற இருக்கக்கூடிய நிலையில் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்ற தருவாயில் உள்ளது.பல ஆண்டுகளாக சாத்தனூர்அணை பராமரிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தான் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தற்போது 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 20 ஷட்டர்களை புதியதாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும்.
தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அணைக்கு தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் 97.45 அடியாக இருப்பதால் அணைக்கு வரக்கூடிய நீரை அப்படியே வெளியேற்றக் கூடிய சூழ்நிலையில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஏரிகளை நிரப்புவதற்க்கும் அந்த பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்கள் பயன்பெறவும் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் வழியாக நீர் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர். கடந்த 5 மாத காலத்தில் நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் சீர் அமைக்கப்பட்டிருப்பதாகவும். கடைமடை வரை நீர் செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது திறக்கப்படும் நீர் கடைமடை வரை சென்றடையும் என்று தெரிவித்தார்.
மேலும் முறையான நந்தன் கால்வாய் திட்டம் சாத்தனார் அணைக்கு மேல் பகுதியில் தடுப்பணை அமைத்து அதன் மூலமாக செயல் படுத்தினால் தான் திருவண்ணாமலை மாவட்டம் ஒட்டுமொத்த பகுதிக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான பகுதிக்கும். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களும் பயன்பெறும் நந்தன் கால்வாய் திட்டம் சிறப்பான திட்டம் கிடப்பில் உள்ள அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மூலம் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.