Congress MP: அம்பானிஸ்தான், அதானிஸ்தானாக மாறிவிடுமோ ஹிந்துஸ்தான்..? - ஆரணி எம்.பி. விஷ்ணுபிரசாத்...!
ஹிந்துஸ்தான் என்பது அம்பானிஸ்தான் அதானிஸ்தான் என்று மாறிவிடுமோ? என்ற அச்சம் மக்களிடம் வந்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் விமர்சனம் செய்தார்.
ராகுல் காந்தியின் பதவியை பறித்த பாஜகவின் ஜனநாயக படுகொலையை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மற்றும் வடக்கு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருவண்ணாமலையில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி எம்பி எம்.கே.விஷ்ணுபிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, இந்தியா படுபாதாளத்தில் சென்று கொண்டிருப்பது என்பதை உணர்த்தும் வகையிலும், ஜனநாயகத்தை கொலை செய்தவர் மோடி அரசாங்கத்தை எதிர்க்கும் வகையிலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருவதாகவும், பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை பார்த்து ராகுல் காந்தி கேட்ட மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல்., ராகுல்காந்தி மீது போடப்பட்ட பழைய வழக்கை எடுத்து தற்பொழுது இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், எம்பி பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது அவரது இல்லத்தை உடனடியாக காலி செய்ய கூறியது என்பதை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது ஆட்டுவிப்பவர் யாரோ ஒருவர் பாடல் வரிகளைப் போலதிட்டமிட்ட செயல்.
ராகுல் காந்தி ஒருவர் தான் தைரியத்துடனும் தனது கொள்கை மாறாமலும் மன வலிமையுடனும் எந்தவிதமான சலசலப்புக்கும் இன்றி பயமும் இன்றி மோடியை எதிர்த்து நின்று நியாயத்தை கேட்கக் கூடியவர். ஆகையால் தான் பா.ஜ.க. எம்பி மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ராகுல் காந்தி மீது திட்டமிட்டு பாஜக அரசு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பாஜக அரசு பாராளுமன்றத்தை முடக்குவதில் மும்மரமாக உள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.பாராளுமன்றத்தில் 19 எதிர்க்கட்சிகள் ஒன்றாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகளால் ஒருநாள் கூட பாராளுமன்றம் முடக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் 19 எதிர்க்கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் உள்ளதாகவும் கூறினார். இதனால் மோடிக்கு பயம் வந்து விட்டதால் பாராளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்திய நாட்டில் எந்த விதமான முன்னேற்றத்திற்கும் வழி இல்லை, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவும் விலைவாசியை குறைப்பதற்காகவும் வழியும் இல்லை என்றும் ஆனால் இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றிவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறார்கள் என்றும் விமர்சித்தார். ஆளும் பாஜக அரசு ஜிஎஸ்டியை் நம்பி மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும்,
பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுடன் கொலிஜியம் முறையை கலைத்து விட்டதாகவும், அது தொடர்பாக மீண்டும் பிரச்சினை எழுப்பியவுடன் கொலிஜியம் முறையை பின்பற்றியதாகவும் கூறிய அவர் நீதிபதிகள் நியமனம் செய்வதில் பாஜக அரசின் மீது சந்தேக நிழல்படுகிறது. மோடி அரசு அதானிக்கும் அம்பானிக்கும் வெண்சாமரம் வீசி வருவது பொது மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை. ஹிந்துஸ்தான் என்பது அம்பானிஸ்தான் அதானிஸ்தான் என்று மாறிவிடுமோ என்ற அச்சம் மக்களிடம் வந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற 15ஆம் தேதி ரயில் மறியல் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் அவர் எச்சரித்தார்.