கொரோனா மூன்றாம் அலையை குறிவைத்து மது பிசினஸ் - 8 லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் பறிமுதல்
கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கையால் மீண்டும் ஊரடங்கு வந்தால் ஏற்படும் மது தட்டுப்பாட்டை நீக்க சொந்தமாக கள்ளச்சாராயம் தயாரிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
கொரோனா மூன்றாம் அலை ஊரடங்கை குறிவைத்து போலி மதுபான பாட்டில்கள் தயார் செய்து பதுக்கி வைத்திருந்த 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த அவளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாமண்டூர்-களத்தூர் சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த தேக்கு மரத்தோப்பில், புதிதாக ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதை போலீசார் நோட்டமிட்டனர் .
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணை மேற்கொள்வதற்காக அப்பகுதிக்கு காவல்துறையினர் சென்ற போது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு ஒரு கும்பல் ஓட்டம் பிடித்துள்ளது. இதனையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் சோதனையிட்டதில் 470 போலி மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மூன்று இரு சக்கர வாகனம் ஒரு புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை அவளூர் போலீசார் பறிமுதல் செய்ததுடன், கைப்பற்றப்பட்ட வாகனங்களின் வாகன பதிவு எண்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் இரு சக்கர வாகன பதிவு எண்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டபொழுது அதில் ஒரு இருசக்கர வாகனம் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் (39) என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர் .
அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது கொரோனா மூன்றாம் அலை வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலை உள்ளதாகவும், எனவே அச்சமயத்தில் போலி மதுபான பாட்டில் விற்பனையில் ஈடுபட தற்போது இருந்தே போலி மதுபான பாட்டில்களை தனது கூட்டாளிகள் உதவியுடன் தயாரித்து வருவதாகவும் ஒப்புக்கொண்டார் .
மேலும் போலி மதுபான பாட்டில் தயாரிக்க மூலப் பொருட்களைப் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த கவியரசன், ரவிச்சந்திரன் மற்றும் குமார் ஆகியோர் உதவியுடன் கள்ள சந்தையில் வாங்கி இதனை செய்யாறு அடுத்த புளியம்பாக்கம் பகுதியில் பச்சையப்பன் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் கடலூர் பகுதியைச் சேர்ந்த சற்குணம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த கண்ணன் ஆகியோரின் துணையோடு போலி மதுபான பாட்டில்கள் தயார் செய்வதாகவும், கொரோனா 3ஆவது அலை ஊரடங்கு பிறப்பித்தவுடன் அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குப் போலி மதுபான பாட்டில்களை விநியோகம் செய்ய திட்டம் தீட்டியிருந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் .
இந்த திட்டத்தை தீட்டி மூளையாக இருந்து செயல்பட்டு வந்தது கடலூர் பகுதியைச் சேர்ந்த சர்குணம் என்பதும் அவர் தலைமையிலேயே போலி மதுபான பாட்டில் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருவதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது .
இதனையடுத்து தனிப்படை போலீசார் பாண்டிச்சேரி மற்றும் செய்யார் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 கேன் எரிசாராயம், 3,200 போலி ஸ்டிக்கர்கள், தமிழ்நாடு அரசின் போலி ஹாலோகிராம், 1,250 மூடிகள் மற்றும் மது பாட்டல்கள், சீல் செய்யும் இயந்திரம் உள்ளிட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அன்பரசன்(39) , விக்கி (30), சற்குணம்(35) , குமார் (38), ரவிச்சந்திரன் (40) ,கவியரசன், பச்சையப்பன் கண்ணன்(40) ஆகிய 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.