'அவசியம் என்றால் மட்டுமே வெளியில் செல்லவும்!' - உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் அறிவுரை!
டெல்லி நீதிமன்றம் உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை வழக்கு முடியும் வரை, வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி நீதிமன்றம் உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை வழக்கு முடியும் வரை, வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே மத்திய ரிசர்வ் படை வீரர்களின் பாதுகாப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் தன்னைச் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதில்லை என உயர்நீதிமன்றத்தை நாடிய பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி மாவட்ட அமர்வு நீதிபதி தர்மேஷ் ஷர்மா இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர், “உங்கள் பாதுகாப்புக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிக்கின்றனர். வெளியில் செல்வதாக இருந்தால், அவர்களுக்குத் தகவல் அளித்துவிட்டுச் செல்லுங்கள். ஒவ்வொரு நாளும் வெளியில் செல்வதற்காகத் திட்டங்களை வகுக்காமல், அவசியம் என்னும் போது மட்டும் வெளியில் செல்லுங்கள். வழக்கு முடிவடையும் வரை, வெளியில் செல்வதை அறவே தவிர்த்துவிடுங்கள்” என்றும் அறிவுரை கூறியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் 4 அன்று, உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் 17 வயது சிறுமியாகக் கடத்தப்பட்ட இவரை, மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தார். சுமார் 9 நாட்கள் வரை, கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்தப் பெண்ணின் வழக்கில் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 3 அன்று சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இது மாற, நாடு முழுவதும் உன்னாவ் பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது.
உன்னாவ் வழக்கில் முக்கிய குற்றவாளியான பி.ஜே.பி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி புகார் அளித்ததற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையும் சகோதரரும் பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சிறையில் மரணமடைந்தார்.
சி.பி.ஐ விசாரணையில், எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரும், அவரது இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். குல்தீப் சிங் செங்காரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்ற மற்றொரு பெண்ணும் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு, உன்னாவ் பகுதியில் இருந்து டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு, உன்னாவிலிருந்து ரே பரேலிக்குக் சென்றுகொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண் பயணித்த கார் மீது லாரி மோதியதில், அவரும் அவரது வழக்கறிஞர் மகேந்திரா சிங்கும் பலத்த காயம் அடைந்தனர். இதனால் அவர்களது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் படை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உன்னாவ் வழக்கின் முதன்மைக் குற்றவாளியான எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது சிறாரை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ள அவர், தற்போது தனது தண்டனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.