மேலும் அறிய
கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலையம் : ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை..!
ஒட்டப்பிடாரம் பேருந்து நிலையத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி அலுவலகம் அமைந்துள்ளது.

ஒட்டப்பிடாரம்
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள பேருந்து நிலையத்தை சீரமைத்து திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், சார்கருவூலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், வஉசி இல்லம், வட்டார வீட்டு வசதி வாரியம், வங்கிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் வட்டார தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. ஓட்டப்பிடாரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அரசு அலுவலகம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

ஒட்டப்பிடாரத்தில் பேருந்து நிலையம் இல்லாமல் இருந்தது. எனவே பேருந்து நிலையம் கட்டவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து கடந்த 2005-ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் பேருந்து நிலையம் கட்டுவதற்காக வாங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான சிவபெருமாள், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அந்த நிதி மூலம் பேருந்து நிலையம் உடனடியாக அமைக்கப்பட்டது.

ஆனால், பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வராததால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் அந்தப் பகுதிகளில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, தரைதளம் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து பேருந்து நிலையத்தில் கூடுதல் கடைகளை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் மக்களுக்கு பாதுகாப்பாக அமையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கப்பலோட்டிய தமிழன் வஉசி பிறந்த ஊரில் ஒரு பேருந்து நிலையம் இல்லை என்ற குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சியர் முடிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















