நார்த்தாமலை காப்பு காட்டில் மலைப்பாம்பு சரணாலயம் அமைக்கப்படுமா..? மக்கள் எதிர்பார்ப்பு
அன்னவாசல் அருகே நார்த்தாமலை வனப்பகுதியான காப்பு காட்டில் மலைப்பாம்பு சரணாலயம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ளது நார்த்தாமலை. இங்கு இருக்கக்கூடிய முத்துமாரியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இதுமட்டுமின்றி நார்த்தாமலை மலைமீது உள்ள விஜய சோழிஸ்வரர் கோவில், குகை தர்கா, சுனைலிங்கம் போன்றவை பிரசித்தி பெற்றவையாகும். இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுகள் பரந்து விரிந்துள்ள பகுதியாக அன்னவாசல் அருகேயுள்ள நார்த்தாமலை விளங்குகிறது. சுமார் 700 எக்டேர் பரப்பளவில் உள்ள இந்த பரந்து விரிந்த வனப் பகுதிகளில் பல்வேறு பாம்பு வகைகள், முயல், நரி, மயில், மான், ஆந்தை எறும்புத்தின்னி, மலைப்பாம்பு, உடும்பு போன்ற ஏராளமான விலங்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உலகில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்பு வகைகளில் மலைப்பாம்பு தான் மிக பெரியது என்று ஆய்வுகள் கூறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், இலுப்பூர், பரம்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, பெருமநாடு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அதிகளவில் வயல்வெளி, குடியிருப்பு பகுதிக்குள் அண்மை காலமாக இவ்வகை அரிய மலைப் பாம்புகள் அவ்வப்போது சுற்றி திரிகிறது. இவ்வகை மலைப்பாம்பு எவ்வளவு நீளம் வளருகிறதோ அதன் இரையும் பெரியதாக இருக்க வேண்டும் என்று பாம்புகள் எண்ணுவதாக ஆய்வுகள் கூறுகின்றது. இதனால் வழியில் சுற்றித்திரியும் ஆடு, கன்றுக்குட்டிகள், மயில், முயல், கோழி, போன்ற விலங்குகள் பாம்புக்கு இரையாகும்.
இந்நிலையில், விளைநிலப் பகுதிகளில் உள்ள களத்து மேட்டில் பாதுகாப்பு வேலி அமைத்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பை தொழிலாக விவசாயிகள் பலர் செய்து வரும் நிலையில், காட்டுக்குள் இருந்து இரை தேடி சில நேரங்களில் கிராமங்களுக்குள் புகும் மலைப்பாம்புகளால் கால்நடைகள் தாக்கப்பட்டு உயிரிழப்பு நேரிடுமோ என்று சமீப காலமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். அன்னவாசல், இலுப்பூர் வன சரகத்தில் மட்டும் 2013-ம் ஆண்டு முதல் 2022 ஆண்டுவரை 9 ஆண்டுகளில் சுற்று வட்டாரத்தில் பிடிபட்ட 200-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள் வனத்துறையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு, நார்த்தாமலை வன காப்புக்காட்டில் விடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். விவசாயப்பகுதி, குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிவதாக கிடைக்கும் தகவலின் பேரில் தீயணைப்புதுறையினர் மற்றும் வன அலுவலர்கள், பொதுமக்கள் அதனை பிடித்து சென்று நார்த்தாமலை காப்புகாட்டில் அவிழ்த்து விடுவது வாடிக்கையாகும். எனவே, நார்த்தாமலை வன சரகத்தில் மலைப்பாம்புக்கான சரணாலயம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் நார்த்தாமலை வன பகுதியில் மலைப்பாம்பு சரணாலயம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அப்பகுதிக்குள் சுற்றித்திரியும் அரிய வகை மலைப்பாம்புகளை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த காட்டினை இன்னும் பழ வகை மரங்கள், மூலிகை மரங்கள் நட்டு பராமரித்தால் பறவைகள் மற்றும் மான்கள் பல உலவும். பசுமை இடமாக மாறும். மேலும் இங்கு பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரமும் உள்ளது. இந்த வனத்தினை மான் மற்றும் மலைப்பாம்புகளின் சரணாலயமாக மாற்றுவதன் மூலம் புதுக்கோட்டையில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக மாறும். வன விலங்குகள் வாழ்வு பெறும் இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசு இந்த மலையை சிறந்த வனமாக மாற்ற உதவ வேண்டும் என்றனர். மேலும் நார்த்தாமலை காட்டை சுற்றி முள்வேலி அமைக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது. நார்த்தாமலையில் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து மலைப்பாம்பு சரணாலயம் ஒன்று அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வாலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.