காதலை பிரித்து கட்டாயக் கல்யாணம்: கணவரை கொலை செய்துவிட்டு காதலனோடு சேர்ந்து கம்பி எண்ணும் காதலி
திருச்சி மாவட்டத்தில் கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு- திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அப்பணநல்லூர் ஊராட்சி மாதுளம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 35). இவருடைய மனைவி அமுதா (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். டிரைவரான குமரவேல் கடந்த 2018-ம் ஆண்டு குடும்பத்துடன் திருப்பூர் பள்ளக்கவுண்டன் பாளையம் அருகே உள்ள துலுக்கன் தோட்டத்தில் வசித்து வந்தார். அந்த ஆண்டு ஜனவரி 13-ந்தேதி பொங்கல் பண்டிகையையொட்டி குமரவேல் தனது குடும்பத்துடன் மனைவியின் ஊரான துறையூர் அருகே கண்ணனூர் அய்யம்பாளையத்தில் உள்ள குரும்பப்பட்டிக்கு வந்தார். இந்த நிலையில் மறுநாள் இரவு 7 மணிக்கு அங்குள்ள குப்பைக்கிடங்கு பகுதியில் கழுத்தின் பின்பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குமரவேல் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குமரவேல் காதல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது குமரவேலின் மனைவி அமுதாவிற்கும், முசிறி வெள்ளாளப்பட்டியை சேர்ந்த விவசாயி கண்ணன் (33) என்பவருக்கும் திருமணத்திற்கு முன்பே பழக்கம் இருந்துள்ளது. ஆனால் அமுதா பெற்றோரின் வற்புறுத்தலின்பேரில் குமரவேலை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், கண்ணன் கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அமுதாவிற்கும், கண்ணனுக்கும் தொடர்ந்து பழக்கம் இருந்து வந்தது. இதை அறிந்த சத்யா, கண்ணனை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் கண்ணனுக்கு அமுதாவுடன் நெருக்கம் அதிகரித்தது. இதற்கு குமரவேல் தடையாக இருந்ததால் அவரை தீர்த்து கட்ட திட்டம் போட்டனர்.
இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையொட்டி குருவம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குமரவேலுடன் அமுதா வந்தார். அப்போது கண்ணன், குமரவேலிடம் பொங்கலுக்கு மது விருந்து வைப்பதாக கூறி அவரை அய்யம்பாளையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு இருட்டான பகுதியில் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென குமரவேலின் பின்னால் சென்ற கண்ணன் அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் அமுதா தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் நடித்தார். ஆனாலும் குமரவேலின் செல்போனுக்கு வந்த கடைசி அழைப்பை வைத்து, போலீசார் துப்பு துலக்கியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து அமுதா, கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திருச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணன், அமுதாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.