“எங்களுக்கு மத நம்பிக்கை உண்டு, ஆனால் மதத்தை அரசியலில் புகுத்த வேண்டாம்” - கே.எஸ்.அழகிரி
அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா ஒரு கூட்டத்தையே காசியில் வைத்திருக்கிறது - கே.எஸ்.அழகிரி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் 60-வது பிறந்தநாள் மணி விழாவையொட்டி கட்சியின் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் மாமனிதருக்கு மணி விழா திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், “காலமெல்லாம் உழைத்து தம் மக்களை முன்னுக்கு கொண்டு வந்தவர் திருமாவளவன். எப்பொழுதுமே பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் திருமாவளவன். நமக்குள் ஏராளமான வேறுபாடுகள் உண்டு, திமுகவுக்கும், காங்கிரசுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால் புரட்சி மூலம் வெற்றி பெற முடியும் என்று சொல்கிறது திராவிட இயக்கம், அமைதியின் மூலம் வெற்றி பெற முடியும் என்று சொல்கிறது காங்கிரஸ். ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியை சொல்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
சிறுபான்மையினர் தலித் மக்களை தவிர்த்து தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இந்த இரண்டு சமூகங்களையும் தவிர்த்து வெற்றி பெற முடியும் என்று சில இடங்களில் பாஜக நிருபித்து காட்டி இருக்கிறது. மதத்தை சொல்லி வெற்றி பெறுகிறேன், என்று ஒரு கேவலமான காரியத்தை செய்து வெற்றி பெறுகிறார்கள், என்று சொன்னால் நாம் தவறு செய்து இருக்கிறோம் என்பதுதான் அதன் பொருள். தலித் மக்களின் வாக்குகள் தான் சிதற கூடியவை, பணம் கொடுத்து வாங்கக்கூடியவை என்று நப்பாசையில் இருந்தவர்களை, அப்படி இல்லை என்று தலித் மக்களை ஒன்று திரட்டி வென்று காட்டியவர் திருமாவளவன். இந்தியாவில் எங்கு வேணாலும் கால் பதிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த மோடியை தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்று நிரூபித்துக் காட்டியுள்ளோம். தமிழகத்தில் கொள்கை புரிதலோடு மக்கள் இருக்கிறார்கள். காந்தி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த நாட்டின் சுதந்திரம் ஆர்எஸ்எஸ் கையில் போயிருக்கும். மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் நாம் ஒன்றாக இருக்கிறோம் அதுதான் இந்த கொள்கையின் வெற்றி. எங்களுக்கு மத நம்பிக்கை உண்டு. ஆனால் மதத்தை அரசியலில் புகுத்த வேண்டாம் என்று சொல்கிறோம்.
குறிப்பாக அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா ஒரு கூட்டத்தையே காசியில் வைத்திருக்கிறது. நமது தேர்தல் முறை துரதிஷ்டவசமாக பணத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து விட்டது. ஆனால் அனைவரும் ஒன்றினைந்து நாம் யாரு என்று காட்டவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்” என தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















