Accident: அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்.. விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வேன் விபத்து - 3 பேர் உயிரிழப்பு
அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்.. விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வேன் விபத்து
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் விசிக கட்சியைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பிரமாண்டமான மாநாடு நடைபெற்றது. வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் அயோத்தியில் மசூதி கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்துவது போதாது. இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு’ என தெரிவித்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்றனர்.
இதனிடையே மிகவும் சிறப்பாக மாநாடு முடிந்த நிலையில், ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்த தொண்டர்களின் வேன் ஒன்று அரியலூர் மாவட்டம் வேப்பூர் அருகே எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த விசிக தொண்டர்கள் 3 பேர் உயிரிழந்ததனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் தொப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வேப்பூர் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்க கலக்கத்தில் விபத்து நடந்ததா அல்லது வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து சம்பவம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.