(Source: Poll of Polls)
துணை முதல்வருக்கு இணையான துறைகளை உதயநிதி ஸ்டாலின் வைத்துள்ளார் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் மகளிர் சுயமரியாதையுடனும், அறிவுடனும் வாழ வேண்டும் என நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும், அதை தொடர்ந்து செயல்படுத்தியும் வருகிறார்- அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று 3 இடங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் காலை 9.30 மணிக்கு திருச்சி வருகை தந்தார். அவருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வந்தார். விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். இதையடுத்து முதல் நிகழ்வாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக் டர் மா.பிரதீப்குமார் வரவேற்றார்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா, கீழபுலிவார்டு ரோடு லாரி டெர்மினல் உள்ளிட்ட 5,639 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5,951 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ரூ.79 கோடி மதிப்பீட்டில் 22,716 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 42,081 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,548.04 கோடி வங்கிக்கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள் வழங்கப்பட்டன. இதில் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 2,764 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 54,654 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.78 கோடி வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் இதர பயன்களை வழங்கினார். மேலும் 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார். இதனை தொடர்ந்து விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி மற்றும் கடனுதவிகளை வழங்கினார். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம், மணப்பாறை சிப்காட் பூங்கா, காகித தொழிற்ச்சாலையை தொடங்கி வைத்தார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக வரவேற்பு உரை ஆற்றிய பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது.. திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர், மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றிகள். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அண்னன் நேரு அவர்கள் என்ன சொன்னாலும் அதை நாங்கள் பின்பற்றி நடப்போம் என்றார். மேலும் தமிழகத்தில் மகளிர் சுயமரியாதையுடனும், அறிவுடனும் வாழ வேண்டும் என நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும், அதை தொடர்ந்து செயல்படுத்தியும் வருகிறார். மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டு செயல்படுபவர் நம் முதல்வர் தான். மேலும் தற்போது அமைச்சராக பொருப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் துணை முதல்வருக்கு இணையான துறைகளை வைத்துள்ளார், சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள் என்றார்.