(Source: ECI/ABP News/ABP Majha)
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் மரணம் - உறவினர்கள் போராட்டம்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி ராம்ஜிநகர் மில்காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி லட்சுமி (வயது 46). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் லட்சுமிக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவரை கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கர்ப்பப்பையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. ஆனாலும் லட்சுமியின் உடல்நிலை மேலும் மோசமானதை தொடர்ந்து மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.@abpnadu #PrivateHospital #Thetreatedwomandiedsuddenly #Relativeswhorefusedtobuyhisbody #Relativesattheroadblock #TrichyDistrict pic.twitter.com/krev0IHwEx
— Dheepan M R (@mrdheepan) October 6, 2022
இதனை தொடர்ந்து தகவல் அறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே லட்சுமிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், இது தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று காலை அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு வெளியே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்துக்கு தேங்கி நின்றன. தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உறவினர்கள் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார்கள். அதன்பிறகு அவர்கள் உடலை பெற்று சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்