உறையூர் விவகாரம்; குடிநீரில் கலப்படமா? மக்கள் குற்றச்சாட்டிற்கு திருச்சி மேயர் சொன்ன பதில் என்ன?
சித்திரை திருவிழாவில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட பானங்களில் கலப்படம் ஏற்பட்டு இருக்கலாம் என மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தை மக்கள் ஏற்கவில்லை.

திருச்சி: திருச்சி உறையூர் பகுதியில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக சிறுமி உட்பட 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மேயர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி உறையூர் பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 50க்கு மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர். இதற்கு இப்பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழப்பு மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று கேட்டு மக்கள் கேள்விகள் எழுப்பினர்.
இதற்கு சித்திரை திருவிழாவில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட பானங்களில் கலப்படம் ஏற்பட்டு இருக்கலாம் என மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தை மக்கள் ஏற்கவில்லை. திருவிழா நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. பாதிப்பு ஏற்பட்டது இப்போதுதான் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மக்களை சமாதானப்படுத்திய மாநகராட்சி மேயர் அன்பழகன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் மாநகராட்சி மேயர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
”திருச்சி உறையூர் பகுதியில் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட காரணத்தால் ஆய்வு செய்துள்ளோம். தண்ணீரில் கழிவு நீர் கலந்துள்ளதாக கூறினார்கள். ஆனால் ஆய்வில் எந்த கலப்படமும் இல்லை. என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.
சித்திரை திருவிழா நடைபெற்ற போது அங்கு கொடுக்கப்பட்ட பானகம், நீர், மோரில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். இருப்பினும் அந்த தண்ணீரை சோதனை செய்வதற்காக இன்று காலை ஒவ்வொரு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட உள்ளோம்.
பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. எங்கும் குழி நோண்டவில்லை. ஆனால் தண்ணீரில் கலப்படம் எனக் கூறி இருக்கிறார்கள். தண்ணீரில் எந்த இடத்தில் கலப்படம் என ஆய்வு செய்து வருகிறோம். அண்டர் டிரைனேஜ் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்கள். அதனை சரி செய்ய அதிகாரிகளை நியமித்து உள்ளோம்.
இப்பகுதியில் லாரி மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் சோதனை இன்று நடைபெற உள்ளது. இதுவரை மாநகராட்சிக்கு எந்த புகாரும் கொடுக்கவில்லை. ஆனால் இளநிலை பொறியாளரிடம் புகார் கொடுத்ததாக கூறுகிறார்கள். இதே போல திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த சம்பவம் கடந்த காலத்தில் நடந்தது. அதனை சரி செய்து உள்ளோம். 40 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தநல்லூர், சீரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியவர்கள் 13 பேர், பெரியவர்கள் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

